குற்றவாளி கருணாஸ்
புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்தது. வரும் மே 5-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படுகிறது.
முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 2 நாட்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என அறிவித்தார். வரும் மே 5-ம் தேதி இரு தரப்பு வாதத்துக்கு பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தார்.
இவ்வழக்குதொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், குழந்தையை அடைத்து வைத்தல், கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மரணத்தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கிறது. அரிதினும் அரிதான வழக்கு என உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு தரப்பு, எதிர்தரப்பு விவாதங்களுக்கு பிறகு தண்டனை விவரம் தெரிவிப்பார்கள்.
அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் தீர்வு என வாதங்கள் வைத்துள்ளோம். வாதங்கள் கடந்த 15 முதல் 17 வரை நடந்தது. எழுத்துப்பூர்வ வாதங்களையும் எடுத்து வைத்துள்ளோம்.
இவ்வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்தரப்புக்கு ஆஜராகவில்லை. இலவச சட்ட உதவி மையம் மூலம் விழுப்புரம் வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்காக நீதிமன்றம் நியமித்தது. அரசு தரப்பு சாட்சியங்கள் 54 பேரை விசாரித்தோம். 80 ஆவணங்கள், பாதிக்கப்பட்ட சிறுமி செருப்பு, ஆடை, முடி, கைப்பற்றப்பட்ட உயிரி மாதிரிங்கள் சான்று பொருட்களாக சமர்பித்தோம்.
கடந்த 2024 நவம்பரில் சாட்சி விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.குற்றம் சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தன.
முக்கிய வழக்குகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை இறப்பு , குழந்தை 12 வயதுக்கு கீழ் இருப்பது ஆகிய மூன்று குற்றங்கள் அடிப்படையில் இவ் வழக்கு இருக்கிறது. அதனால் தண்டனையை உடன் அறிவிக்க இயலாது.
வழக்குகளில் குற்றவாளி தீர்ப்பு வந்த பிறகு என வந்த பிறகு தண்டனை குறைக்க குற்றவாளி தரப்பும், அதிகபட்ச தண்டனை தர அரசு தரப்பும் வாதம் செய்யவுள்ளனர். அதன்பிறகுதான் தண்டனை விவரம் அறிவிக்கப்படும்" என்றார். இவ்வழக்கு விசாரணை பார்ப்பதற்காக சிறுமி பெற்றோர், உறவினர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர்.