

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் ஏப்.30-ம் தேதி நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே 3-வது பெரிய தேராக, உயரமான தேராக கருதப்படும் இந்த தேரின் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
நிகழாண்டு கொடியேற்றம் கடந்த ஏப்.22-ம் தேதி நடைபெற்றது. ஏப். 23-ம் தேதி முதல் வரும் அடுத்த மாதம் மே 9-ம் தேதி வரை பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.
பிரதான விழாவான ஏப்.30-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் பெருமாள் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளலும், காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற்றது..
தேரில் உபயநாச்சியார்கள் உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. வரும் மே 9-ம் தேதி ஸப்தாவர்ணம், காலை 11 மணிக்கு 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், 19-ம் தேதி இரவு 8 மணிக்கு நூதன அன்னபட்சி கண்ணாடி பல்லக்கில் சாரங்கபாணி,சக்கரபாணி, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய 3 பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
இதே போல் கும்பகோணம் வட்டம், கொரநாட்டுக்கரூப்பூரில் உள்ள அபிராமி அம்பிகா உடனாய சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் ஏப்.23-ம் தேதி தொடங்கி வரும் மே 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெட்டி காளியம்மன் கோயில் என்ற சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் இந்த விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கொடியேற்றம் கடந்த ஏப்.22-ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து ஏப்.23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது, பிரதான விழாவான தேரோட்டம் ஏப்.30-ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளுல், காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது, தேரில் அபிராமி அம்பிகா உடனாய சுந்தரேஸ்வரர் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர்.
மே 1-ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி, மே 3-ம் தேதி விடையாற்றி, சண்டிகேஸ்வரர் உள் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அந்தந்த கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.