கரூர்: “நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது கருணாநிதியிடம்தான் திமுக இருந்தது. இப்போது அமித் ஷாவிடம் அதிமுக உள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் கடிவாளத்தை கருணாநிதி கையில் வைத்திருந்தார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் கரூர், ராயனூரில் இன்று மாலை நடைபெற்றது. கரூர் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.செந்தில் பாலாஜி வரவேற்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு கேட்டு பேசியது: “காலையில் திருச்சியில் பிரச்சாரம் செய்துவிட்டு, கரூர் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கரூர் என்றால் கழக ஊர். செப்டம்பரில் நடந்த முப்பெரும் விழா எழுச்சியைவிட பன்மடங்கு எழுச்சியை மீண்டும் காண்கிறேன். அடுத்த மாதம் திராவிட மாடல் 2.0 வெற்றி விழாவுக்கு தயாரா? உங்களை போல தயாராக 4 வேட்பாளர்கள் நிற்கின்றனர்.
அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சி.கே.ராஜா, கலைஞர் முதன் முதலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தொகுதியான குளித்தலையில் சூரியனூரைச் சேர்ந்த சந்திரன், கரூர் ஆர்.சி.எம்.தியாகராஜன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கரூரை பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை என உங்களுக்கேத் தெரியும். செந்தில்பாலாஜி மாவட்டம் இது. நிச்சயம் 100 சதவீதம் வெற்றி உறுதி. கரூரில் கூட்டணியின் வெற்றியை அவர் எப்பவோ உறுதி செய்ததால் தான் கோவை மாவட்ட பொறுப்பு கொடுத்துள்ளேன்.
நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். அவர் புகுந்த வீடு தான் கோவை, பிறந்த கரூரை என்றும் மறக்க மாட்டார். பல சோதனைகள் தாண்டி சாதனை படைப்பவர் தான் செந்தில்பாலாஜி. இந்த முறை கரூர், கோவை நம் வசம் தான். ஏன் தமிழ்நாடு மொத்தமும் நாம் தான். நமது கூட்டணி 200க்கு தொகுதிக்கு குறையாத வெற்றி பெற உள்ளது.
திமுக ஆட்சியில் கரூரில் மட்டும் ரூ.5,000 கோடி திட்டங்களை செய்துள்ளோம். கடந்த தேர்தலின் போது மக்களுக்கு சொன்னதையும், சொல்லாததையும் செய்தவன் தான் இந்த ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியில் சாதி, மதக் கலவரங்கள், கும்பல், தொடர் வன்முறைகள் இல்லை. தமிழகம் அமைதியாக, மக்கள் நிம்மதியாக உள்ளனர். இதை பார்த்து அதிமுக - பாஜக டென்ஷனாக உள்ளனர்.
தமிழக மக்கள் என்னோடு இருக்கும் வரை டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின் என தமிழகத்தை யாரும் சீரழிக்க உள்ளே வரமுடியாது. அதை தடுத்து நிறுத்தி தமிழக வளர்ச்சி பயணத்தை சூப்பர் ஃபார்ஸ்டாக தொடர திராவிட மாடலுக்கான சூப்பர் ஸ்டார் திமுக தேர்தல் அறிக்கை, என்டிஏ தூக்கத்தை களைத்து, பழனிசாமிக்கு பதற்றத்தை தந்துள்ளது.
சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும், மறுக்கவும் மாட்டேன். திமுக ஆட்சி பல சாதனைகளை தந்தது. ஆனால் மக்களுக்கு வேதனைகளும், சோதனைகளும் தந்தது தான் அதிமுக ஆட்சி. அதிமுகவுக்கு போட்டி போட்டு தமிழகத்தை வஞ்சிப்பது தான் மோடியின் பாஜக ஆட்சி. எம்பி தேர்தலில் தமிழக மக்கள் ஒரு சீட்கூட வெற்றி பெற வைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று வரை தமிழகத்தை பழிவாங்குவது தான் பாஜக ஆட்சி.
தமிழகத்துக்கு விரோதமாக இருக்கும் கூட்டணிக்கு தக்கப் பாடம் புகட்டும் நாள் தான் ஏப்.23. தமிழக வாக்காளர்கள் அடிமை அதிமுகவுக்கும், ஆணவ பாஜகவுக்கும் பதிலடி தரக்கூடிய நாள் தான் ஏப்.23. அன்று பழனிசாமியின் அமித் ஷா அதிமுக மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் இயக்கும் பாஜகவையும் விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேர்தல் முடிவை இப்போதே தெரிந்து கொண்டதால் தான் பழனிசாமி ஓவராக புலம்புகிறார்.
தன்னைத் தானே பெரிய புலனாய்வுப் புலி என நினைத்து காமெடி செய்கிறார். கருணாநிதியும் வாஜ்பாய் இருக்கும் போட்டோவை காட்டி பாஜகவுடன் நீங்கள் (திமுக) கூட்டணி வைக்கவில்லையா என்கிறார். நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர உங்களைப் போல அடகு வைக்கவில்லை. நாங்கள் கூட்டணி வைத்தபோது கருணாநிதியிடம் தான் திமுக இருந்தது. இப்போது அமித் ஷாவிடம் அதிமுக உள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் கடிவாளத்தை கருணாநிதி கையில் வைத்திருந்தார்.
அதிமுக மட்டுமல்ல என்டிஏவில் உள்ள அத்தனை ஊழல் கட்சிகளின் குடுமிப்பிடியும் அமித் ஷாவிடம் தான் இருக்கிறது. நாங்கள் கூட்டணி வைத்தபோது தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தோம். பழனிசாமி கூட்டணி வைத்து நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு தமிழக உரிமைகளை அடகு வைத்தது தான் மிச்சம். ஊருக்கே தெரிந்த நியூஸை, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் சொல்வது போல மணிக்கு ஒரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்து வருகிறார்.
பழனிசாமி நம்மை பார்த்து இந்தத் தேர்தல் தான் கடைசி தேர்தல் என்கிறார். வழக்கமாக அமாவாசையை பார்த்து ஆருடம் சொல்லும் பழனிசாமி இந்த முறை தவறான ஆருடத்தை சொல்லியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி ஜெயலலிதா வரை துரோகம் செய்து, முதுகில் குத்திய பழனிசாமி அதிமுகவை கைப்பற்றி பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு தன்னிலை உணராமல் ஆணவத்தில் ஆடுகிறார்.
அதிமுகவை நான் உடைக்க நினைத்ததாக அபாண்டமாக பேசுகிறார். அதிமுகவுக்கு வாய்த்த அழிவு சக்தி பழனிசாமி. தலைமைப் பண்பும், அடக்கமும் இல்லாமல் சொந்தக் கட்சியினரையே துரத்திவிட்டு, சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகளுக்குக் கூட துரோகம் செய்தவர் தான் பழனிசாமி.
அதிமுகவிலிருந்து விலகியவர்கள் தாய் கழகமான திமுகவுக்கு வருவதை பார்த்து வயிறு எரிந்து பேசுகிறார். திமுகவிலிருந்து பிரிந்தது தான் அதிமுக. திராவிட இயக்க உணர்விலிருந்து விலகி அந்த இயக்கத்தை தவறான பாதையில் பழனிசாமி கொண்டு போகும்போது, பலரும் விலகி, தாய் கழகத்தில் இணைவது தவறில்லை. வழித்தவறி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வது தான் ஏற்க முடியாது. இதெல்லாம் பாஜக பாதமே சரணாகதி என்றிருக்கும் பழனிசாமிக்கு புரியாது. தடமாறி கூட்டணி வைத்துள்ள பழனிசாமி சிஏஏ சட்டத்துக்கு ஆதரவளித்தார், விவசாயிகளை புரோக்கர்கள் என்றார்.
பல வடிவங்களில் துரோகம் செய்யும் அவர், ஒட்டுமொத்த தமிழகத்துக்கு துரோகம் செய்ய அமைத்துள்ளது தான் டப்பா இன்ஜின் என்டிஏ கூட்டணி. துரோகத்துக்கு துரோகமே துணை என்பது போல அமைந்துள்ளது தான் என்டிஏ கூட்டணி. தேர்தல் நேரத்தில் கூட பாஜக தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாது. வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழக எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே என்டிஏவை தமிழகம் புறக்கணிப்பது தான் தமிழகத்துக்கு நல்லது.
தமிழகத்தை காக்க, வளர்ச்சிப் பாதையில் தொடர, கலவரபூமியாக மாறாமல் இருக்க பாஜக, அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். திமுக கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல தமிழக வெற்றிக்காக அனைவரும் போராட வேண்டும். உங்கள் பொன்னான வாக்குகளை திமுக கூட்டணிக்கு தாருங்கள்” என்று அவர் பேசினார்.