சிவகங்கை: தவெகவுக்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னம், நல்ல சின்னம் என்று கூறி, மக்கள் மன நிலையை அறிந்து தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸாருக்கு சிவ கங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். இது, அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் வெளிப் படையாகவே திமுகவை விமர்சித்தனர்.
மேலும் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரத்தில் விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார். கடந்த வாரம் திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது தவெகவுடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்து புதுடெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
ஆனால், என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தவெகவுக்கு ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் அனைவரையும் சேர்த்துவிட்டீர்களா? மக்களை அணுகி எந்தெந்த கட்சிகளுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
விஜய கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கியிருக்காங்க. அது நல்ல சின்னம். அதற்கு எப்படி வரவேற்பு உள்ளது என்பதையும் கவனியுங்கள். இந்த தேர்தல் நாம் எதிர்பார்க்கிற மாதிரி எளிமையாக இருக்காது; கஷ்டமாகத்தான் இருக்கும். தேர்தலில் காங்கிரஸ் பங்களிப்பு பெரிதாக இருக்க வேண்டும்.
கட்சிகளின் கூட்டணிகளை பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை எனக்கு தொடர்ந்து தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் பேசியிருந்தார். தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சில காங்கிரஸ் நிர்வாகிகள் குரல் எழுப்பியபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் கூறி வந்தனர்.
மேலும், விஜய்க்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைக்குமே தவிர, அவரால் வெற்றிபெற முடியாது. திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் கூறி வந்தார். இந்நிலையில் விஜய்க்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கியதும், தவெகவுக்கு அவர் முக்கி யத்துவம் கொடுத்து பேசி யிருப்பது கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.