கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

 
தமிழகம்

“விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை அரசியலில் பேச வேண்டிய அவசியம் இல்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி

இ.ஜெகநாதன்

சிவகங்கை: “மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ள கட்சிதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை அரசியலில் பேச வேண்டிய அவசியமில்லை” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “மோடி மதுரைக்கு வரட்டும்; சாமி கும்பிட்டுவிட்டு செல்லட்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவா்த்தை நடைபெறுகிறது” என்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறுகையில், “பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் அரசு ஒதுக்கும் நிதி போதவில்லை. இதனால் பலர் கூடுதலாக கடன் வாங்கி தான் கட்டுகின்றனர். கடன் கிடைக்காதோர் வீடுகளை கட்ட முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அத்திட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நிதியை மத்திய அரசு உயர்த்த வேண்டும்.

          

சாதூர்யமாக மிகப் பெரிய கூட்டணியை முதல்வர் அமைத்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்திலேயே அதிக மக்கள் தொகை மிகுந்த நாடு என்பதால், அதற்கேற்ப பொருளாதாரம் வளர தான் செய்யும். ஆனால், வளர்ச்சி என்பது சமமாக இல்லை. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி உள்ளது. கிராமத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சி இல்லை.

காங்கிரஸ், திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு கருணாநிதி, சோனியா காந்தியால் உருவாக்கப்பட்டது. தேர்தல்களை ஒன்றாக சந்தித்து பல வெற்றிகளை பெற்ற கூட்டணி. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துள்ளதால், அதனடிப்படையில் உடன்பாடு எட்டப்படும்.

முருகனின் ஆறுபடை வீட்டுக்கும் பிரதமர் செல்ல வேண்டும். பிரதமரின் அறிவிப்பு அனைத்துமே வெறும் அறிப்பாகவே உள்ளது. ஆனால், அமல்படுத்துவது இல்லை. ஏற்கெனவே மோடி தமிழகத்துக்கு பல முறை வந்துள்ளார். அப்போதெல்லாம் பாஜக தோல்வியைத்தான் தழுவியுள்ளது. அதேதான் இந்த தேர்தலிலும் நடக்கும்.

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை அரசியலில் பேச வேண்டிய அவசியமில்லை.

புதிய கட்சிகள் வந்துகொண்டே இருப்பதால் இண்டியா கூட்டணியின் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ள கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழகத்துக்கு மதச்சார்பற்ற அரசுதான் தேவை” என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

SCROLL FOR NEXT