அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

 
தமிழகம்

கருத்து வேறுபாடுகளை மேலிடம் கவனித்துக் கொள்ளும்; இண்டியா கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வரும்: தினேஷ் குண்டுராவ்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “இண்டியா கூட்டணியிலுள்ள கருத்து வேறுபாடுகளை கட்சி தலைமை சரி செய்து வருகிறது. என்டிஏ மீதான அதிருப்தியால் இண்டியா கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வரும்” என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டு என்டிஏ ஆட்சியில் போலி மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு ஊழல்கள் தொடர்ந்தன. ஆளும் என்டிஏ அரசின் தவறான ஆட்சிக்கு மக்கள் பதிலடி தருவார்கள். மாநில அந்தஸ்துக்காக கட்சி தொடங்கிய ரங்கசாமி கடந்த ஐந்து ஆண்டுகளிலும் ஏதும் செய்யவில்லை. இரட்டை இன்ஜின் ஆட்சி இருப்பதாக தெரிவித்திருந்த சூழலில் அவர்களின் செயல்பாடு இன்ஜினே இல்லாததுபோல் தோன்றுகிறது.

          

என்டிஏ அரசின் மீதான வாக்காளர்களுக்கான அதிருப்தியால் இண்டியா கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வரும். பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை தரும் மத்திய அரசு கர்நாடகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதால் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது. புதுச்சேரியிலும் போதிய நிதி ஒதுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு எதிராக திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடு வெற்றிவாய்ப்பை பாதிக்குமே என்று கேட்டதற்கு, “தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது பல பிரச்சினைகள் இருந்தன. எங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகளவில் இருந்ததால் பலர் போட்டியிட ஆர்வம் காட்டினர். எங்கள் கட்சித் தலைமை பிரச்சினைகளை தீர்வு காண முயன்று வருகிறது.

இப்போது நாங்கள் போர்க்களத்தில் உள்ளோம். இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கையுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள வழிகள் உள்ளன. பொறுப்பில் உள்ள தலைவர்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள்,” என்றார்.

SCROLL FOR NEXT