

கோப்புப் படம்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் இன்று வரை (மார்ச் 30) உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.296.40 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
அனைத்து தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 30.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று ( மார்ச் 30) வரை பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: ரொக்கமாக ரூ.61.98 கோடியும், மதுபானம் ரூ. 1.17 கோடி மதிப்பிலும், போதைப்பொருட்கள் ரூ.8.39 கோடி மதிப்பிலும், தங்கம்/வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் ரூ.197.35 கோடி மதிப்பிலும் மற்றும் இதர பொருட்கள்/இலவசங்கள் ரூ. 27.51 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.296.40 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.