ஓசூர்: ஓசூரில் சர்வதேச விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கூறியதால் உள்ளூர் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழில் நகரமான ஓசூரில் தொழில் முதலீ்ட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு மற்றும் விமான நிலையத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிபுணர்களை நியமனம் செய்ததோடு, ஓசூர்-சூளகிரி இடையே 2,800 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்த அரசின் அனுமதி கோரி நிலத்தின் சர்வே எண்களை வெளியிட்டனர். மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டினர்.
இதற்கிடையில், விமான நிலையத்தால் பாதிக்கப்படும் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களுக்கு ஆயத்தமாகினர். சட்டப்பேரவை தேர்தல் வரும் நேரத்தில் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஆளும் கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
அதேநேரம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்ற விவசாயிகளின் போராட்டம், கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு கரம் நீட்டினர்.
விவசாயிகள் போராட்டத்தால் உள்ளூர் செல்வாக்கை இழக்க நேரிடும், தேர்தலில் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடும் என கருதிய உள்ளூர் திமுக மற்றும் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த மாதம் ஓசூர் அருகே விவசாயிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு, “விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் நாங்களும் எதிர்க்கிறோம்.
விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் விமான நிலையம் அமைக்க முதல்வரை வலியுறுத்துவோம்” என சப்பை கட்டி, நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கினர். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசும்போது, “ஓசூரில் விமான நிலையம் வராது என தெரிவிக்கின்றனர். ஆனால், முடியாது என்பதை முடித்துக் காட்டுவது தான் திமுக. எனவே விமான நிலையம் உறுதியாகக் கொண்டு வருவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, “அமைச்சர் ராஜா கூறுவதைப் போன்று விமான நிலையம் உறுதியாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்றார்.
கனிமொழியின் பேச்சால் விவசாயிகளிடையே மீண்டும் கலக்கம் ஏற்பட்டிருப்பதோடு, ஆளும்கட்சிக்கு எதிரான போராட்ட நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே “ஓசூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம்” என விவசாயிகளிடம் அண்மையில் உத்தரவாதம் கொடுத்த உள்ளூர் திமுக, காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கனிமொழியின் பேச்சால், ‘மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்’ விழித்து வருவதோடு, விவசாயிகளை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் உதறலில் உள்ளனர்.