கனிமொழி எம்பி
தூத்துக்குடி: “தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்ததால் யாருக்குப் பயன்?” என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) சென்னை விமான நிலையத்தில் 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் தவெக அரசு குறைத்துள்ளது.
ஆனால், பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், வழக்கமாக ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை இருந்த கட்டணம், அதே வழித்தடங்களில் ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. சில வழித்தடங்களில் ரூ.18,000 வரை எட்டியுள்ளது. எரிபொருள் செலவில் கிடைக்கும் சேமிப்பைப் பயணிகளுக்குக் கட்டணக் குறைப்பாக வழங்குவதாக விமான நிறுவனங்கள் உறுதியளித்தனவா? இந்த வரிக் குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும்?
விமானக் கட்டணத்தைக் குறைப்பது, புதிய வழித்தடங்களில் சேவையைத் தொடங்குவது, ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவது ஆகியவற்றுக்கு அளவிடக்கூடிய இலக்குகளை அரசு நிர்ணயித்ததா? இந்த வரிச் சலுகையால் இதுவரை பயணிகளுக்குக் கிடைத்த நேரடிப் பயன் என்ன? எரிபொருள் செலவு குறைவது விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். அந்த வரிச் சலுகையின் பயன் மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
இந்தச் சலுகைக்காகத் தமிழ்நாடு விட்டுக்கொடுக்கும் வரி வருவாய் எவ்வளவு? அதற்குப் பதிலாகப் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் கிடைத்த சலுகை எவ்வளவு? தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.