சென்னை: ‘முதல்வரை விமர்சித்ததாக தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்த தவெக அரசு, நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?’ என, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகாவைக் கைது செய்திருப்பது இந்த அரசு வேண்டுமென்றே செய்த செயல்.
பெண்கள் மீது அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் தவெகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேயர் பிரியாவை கூட பலமுறை அவதூறாகப் பேசியிருக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வருக்கு மனம் கோணுவது போல் ஏதாவது நடந்து விட்டால் உடனே அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
அதேநேரம், அவர்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் நயினார் நாகேந்திரனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? தவெக ஆட்சியில், அவரது நிர்வாகிகளின் வீட்டிலிருந்தே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை திசை திருப்புவதற்காகவே கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்தபிறகு குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கின்றன.
குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கு முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செஞ்சியில் குழந்தை காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செவிலியர் கொலை வழக்கு குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இங்கு எந்த ஒரு ஆணும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எனவே, அவர்களுக்கு அண்ணனாக இருக்கிறேன்.. சீர் செய்கிறேன் என்றெல்லாம் கூறி ஏமாற்று வதை நிறுத்திவிட்டு உங்கள் கடமையை செய்தாலே போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.