தமிழகம்

“தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லை” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “தமிழக வெற்றி கழகத்துக்கு மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அக்கறை இல்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது” என்று திமுக துணை பொதுச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் வகையிலும் பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: “பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே எங்கள் கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனவே, திமுகவினர் இந்தச் சிறைக்கு வந்தால் அதை பெருமையாகத்தான் கருதுவார்கள்.

அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள், கைது போன்றவற்றுக்கு திமுகவினர் பயப்படமாட்டார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது.

தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

திருவைகுண்டம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறிய நிலையிலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் முதல்வரை தவறாக பேசியதாக சிறையில் அடைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரையும் சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்துக்கு ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லை. காவல் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கிறது.

தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை தவெக எவ்வளவோ விமர்சனங்களை செய்திருந்தது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தமிழக வெற்றி கழகத்துக்கு இல்லை. யாருக்கு பயந்து அரசியல் செய்தார்களோ அதே நிலையில்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். பா.ஜ.க. பெயரை கூட சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் எப்படி கையாளப்படுகிறதோ, அதேபோன்று தமிழகத்திலும் தமிழக வெற்றி கழகம் செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் திமுக கூட்டணி என்ற தகவல்கள் பரவி வருகிறது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுக தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. பாஜகவுடன் இணைகிறது என்ற வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எந்த காலத்திலும் அதிமுகவும், திமுகவும் அரசியல் ரீதியாக நெருங்கியதில்லை. ஆனால், தமிழக நலனுக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்தித்துள்ளோம். தமிழக பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.

நீட் தேர்வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது உறுதியான கருத்து. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாஜக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT