தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: ‘‘தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், காவல் துறையினரால் பெண்களைக் காப்பாற்ற முடியாது. எனவே, ரேஷன் கடைகள் வழியாக ஒவ்வொரு பெண்ணுக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே' வழங்க வேண்டும். அதாவது காப்பாற்றட்டும்’’என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கனிமொழி பேசியதாவது: பெண்கள் தெரியாமல் தவெகவுக்கு வாக்களித்து விட்டோம் என்று வருத்தப்படத் தொடங்கி விட்டனர். தெருவில் இறங்கி போராடவும் தொடங்கி விட்டனர். அதனால் நிச்சயம் மாற்றம் வரும்.
ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால், ‘இது நாடா? காடா?’, ‘பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இதைவிட பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்போம்’ என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு விஜய் வந்தார். இப்போதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில், வன்முறைகளில் ஈடுபட்டிருப்பது தவெகவைச் சார்ந்த நிர்வாகிகள்தான். அதேபோல், அவருடைய கட்சியில் இருக்கக் கூடியவரே 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வீட்டில் வைத்திருந்தார். இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு 700 கொடூரக் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 400 நடந்துள்ளன. இதுதான் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கக் கூடிய லட்சணமா?
இதுவரை 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றிருக்கின்றனர். இப்போது சிறைச்சாலை எப்படி ஆகிவிட்டது என்றால், நீங்கள் உள்ளே போகலாம், நினைத்தால் வெளியே வந்துவிடலாம். இதுதான் இன்று சட்டம் ஒழுங்கு இருக்கும் நிலை. குழந்தைகளுக்குக் கூடப் பாதுகாப்பு தர முடியாமல் துப்பற்ற ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு விரைவில் நாம் ஒரு முடிவு கண்டாக வேண்டும்.
விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது. அரிசி வாங்க முடியவில்லை. ரேஷன் கடையில் சன்னரக அரிசி எனக் கூறி, இருக்கிற அரிசியைப் பாலிஷ் செய்து ஏமாற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு நீங்கள் மோதிரம் போட வேண்டாம். அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய போலீஸோ, உங்கள் படையோ வந்து யாரையும் காப்பாற்றப் போவதில்லை. அதனால், எங்களுடைய சகோதரிகள் ஒவ்வொருவர் கையிலும் ரேஷன் கடைகள் வழியாகப் ‘பெப்பர் ஸ்ப்ரே’யையாவது கொடுங்கள். இந்தத் துப்பில்லாத, வக்கில்லாதஆட்சியில் அதுவாவது எங்களைக் காப்பாற்றட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தவெக ஆட்சி மீது பெண்கள் கடும் கோபம்: மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், "பெண்கள், தங்கள் வீடுகளின் மின் கட்டண ரசீதையும், மளிகை கட்டண ரசீதையும் பார்த்து, இந்த ஆட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக்குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச்சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதல்வருக்கு இருக்கும் கவனம், ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழகப் பெண்கள் அடித்துவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.