தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்? - கனிமொழி தகவல்

செய்திப்பிரிவு

தமிழக வளர்ச்சியை மையமாக வைத்து, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயிகள் பாதுகாப்பு, மாநில உரிமையை உள்ளடக்கி திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. இதில், ஏற்கெனவே உறுதியான கூட்டணியுடன் களத்தில் உள்ள திமுக, கடந்தாண்டு முதலே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், உடன்பிறப்பே வா போன்ற நிகழ்வுகள் மூலம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்துவதுடன், கிட்டத்தட்ட தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும், எந்த தொகுதியை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கலாம் என்பதையும் திமுக தலைமை முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு எம்பி., கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று கனிமொழி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் வழங்கிய ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறுகையில்,‘‘ கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டும். யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. சந்திப்புக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையானது முதல்வரின் ஆலோசனையை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, பூமிப்பந்தை பாதுகாப்பது, விவசாயிகளின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பை மக்களிடம் இருந்து பறிப்பதையே மத்திய அரசு வேலையாக பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மாநில உரிமைகளை பாதுகாப்பது போன்றவற்றை இந்த தேர்தல் அறிக்கை மையப்படுத்தி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT