

“இந்த ஆண்டு திமுக-வுக்கு இறுதி ஆண்டு, இனி அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்பதால் இந்த ஆண்டாவது பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக மக்கள் விரோத அரசாங்கம், அதை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏகெனவே நான் தெரிவித்துள்ளேன். அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசு தொகை வழங்கினார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்தபோது குடும்ப அட்டைக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், பொங்கல் பரிசு குறித்து திமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
இதனால் தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இந்த ஆண்டு திமுக-வுக்கு இறுதி ஆண்டு, இனி அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஆகையால், இந்த ஆண்டாவது பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகையாக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதிமுக ஆட்சியில் ரூ.2,500 கொடுத்தபோது, “ஏன் ரூ.5 ஆயிரம் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். அதே கேள்வியை தான் நாங்களும் எழுப்புகிறோம். முதல்வராக உள்ள ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளது. ஆனால், அதை பாராட்டுவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை. இந்தத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டு இருந்தது. இதுவரை நிறைவேற்றினர்களா?
கடந்த 73 ஆண்டுகளாக தமிழகத்தை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி தான் தமிழகத்தின் கடனாக இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2021 வரை எந்த ஆட்சிக்கும் ஏற்படாத வறட்சி, புயல், வெள்ளம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.
இது மட்டுமில்லாமல் கரோனா காலத்தில் கூட, ஓராண்டு அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் எதுவுமே இல்லை. அப்போது கூட சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் கடனை மட்டுமே வாங்கியுள்ளனர். திமுக ஆட்சி நிறைவு செய்யும்போது, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.
ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தூய சக்தியா, இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவெடுப்பார்கள். ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இப்படியெல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். அதிமுக-வை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
விரைவில் அதிமுக-வுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்கள். அரசாங்கத்தின் மூலமாக ஐந்தரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்கள். நான்கரை ஆண்டு காலத்தில் 75 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதி எதுவும் நிறைவேற்றுவது இல்லை.
எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டால், போலி வாக்காளர் நீக்கப்படுவார்கள். 21 ஆண்டு காலமாக எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அதனால், இறந்தவர்கள் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து, திமுக-காரர்களாக ஓட்டுப் போட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால்தான் இப்போது பதறுகிறார்கள். இறந்தவர்களை வைத்தும், போலி வாக்காளர்களை வைத்தும் வெற்றி பெற்று வந்தோம், அதற்கு இடையூறு வந்துவிட்டது என்று திமுக-வினர்
எஸ்ஐஆர் பணியை எதிர்க்கின்றனர். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.