ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களின்போது திமுக-வின் தேர்தல் அறிக்கை தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை திமுக-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும் என திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர். கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாது:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறோம். இதன்மூலம், திமுக தேர்தல் அறிக்கையை மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கும் வேலைகளைச் செய்து வருகிறோம்.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறாது என மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், திமுக-வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போவதும் நாங்கள் தான்.
கடந்த தேர்தல்களில் திமுக-வின் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது, நீட் தேர்வில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அதுவரை நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மதுக் கடைகள் மூடப்படும். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாடு அதிகளவிலான பெண்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.