தமிழகம்

காஞ்சிபுரம் தொகுதியில் விஞ்சி நிற்கும் வேட்பாளர் யார்?

இரா.ஜெயப்பிரகாஷ்

தமிழகத்​தின் தலைசிறந்த ஆன்​மிகத் தலங்​களில் குறிப்​பிடத்​தக்​கதும், உலகப்​பு​கழ் பெற்ற பட்​டுத் தொழிலின் மையப்​புள்​ளி​யாக​வும் விளங்​கு​கிறது காஞ்​சிபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி, இது தொகுதி வரிசைப் பட்​டியலில் 37-வ​தாக இடம்​பெற்​றுள்​ளது.

காமாட்சி அம்​மன் கோயில், ஏகாம்​பர​நாதர் கோயில், வரத​ராஜப் பெரு​மாள் கோயில், கைலாச​நாதர் கோயில் என முக்​கியக் கோயில்​கள் உள்​படப் பல்​வேறு கோயில்​கள் இருப்​ப​தால், காஞ்​சிபுரத்தை ‘ஆயிரம் கோயில்​களின் நகரம்’ என்று குறிப்​பிடு​வர்.

திரா​விட முன்​னேற்​றக் கழகத்​தின் நிறு​வனர் அண்​ணா, 1957-ம் ஆண்​டில் முதன்​ முதலாக தேர்​தலை சந்​தித்து சட்​டப்​பேர​வைக்​குள் நுழைந்த வரலாற்​றுப் பெருமை கொண்​டது இந்​தத் தொகு​தி.

          

இத்​தொகு​தி, ஆரம்ப காலத்​தில் இருந்தே பெரும்​பாலும் திமுக - அதி​முக ஆகிய இரு துரு​வங்​களின் கோட்​டை​யாகவே இருந்து வந்​துள்​ளது. கடந்த 15 தேர்​தல்​களில் திமுக 7 முறை​யும், அதி​முக 6 முறை​யும் வெற்றி பெற்​றுள்​ளன.

காங்​கிரஸ், பாமக மற்​றும் கிசான் மஸ்​தூர் பிரஜா கட்சி ஆகியவை தலா ஒரு​முறை வென்​றுள்​ளன. கடந்த 2016, 2021 தேர்​தல்​களில் திமுக சார்​பில் போட்​டி​யிட்ட சி.​வி.எம்​.பி.எழிலரசன் வெற்றி பெற்​றார்.

தொகு​தி​யில் நிலவும் பிரச்​சினை​கள்

இந்​தத் தொகு​தி​யில் பட்டு நெசவுத் தொழில் முது​கெலும்​பாக உள்​ளது. விவ​சா​யிகள், நெச​வாளர்​கள் அதி​கம் உள்​ளனர். அரு​காமை​யில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்​புதூர் தொழிற்​சாலைகளுக்​குச் செல்​லும் தொழிலா​ளர்​கள், தொகு​தி​யின் வெற்​றித் தோல்​வியைத் தீர்​மானிக்​கும் முக்​கிய சக்​தி​களாக உள்​ளனர். வன்​னியர்​கள், பட்​டி​யினத்​தவர்​கள், முதலி​யார் சமூகத்​தினர் வாக்​கு​கள் அதி​கம் உள்​ளன.

இவர்​களே வெற்​றித் தோல்​வியை நிர்​ண​யிக்​கும் சக்​தி​களாக உள்​ளனர். நெச​வாளர்​களுக்கு அரசு வழங்​கும் மின்​சா​ரச் சலுகைகள் மற்​றும் நலத்​திட்​டங்​கள் ஒரு​புறம் கைகொடுத்​தா​லும், பட்டு நூல் விலை உயர்வு மற்​றும் இடைத்​தரகர்​களின் ஆதிக்​கம் இந்​த தொழிலுக்குப் பெரும் சவாலாக உள்​ளன.

அதே​போல், ஆன்​மிகச் சுற்​றுலாத் தலமான காஞ்​சி​யில் குறுகலான சாலைகளும், பெரு​கிவரும் வாகன நெரிசலும் பொது​மக்​களின் பொறுமை​யைப் பெரிதும் சோதிக்​கின்றன. காஞ்​சிபுரம் தொகு​தி​யின் மிக நீண்​ட​காலப் பிரச்​சினை​யாக இருப்​பது இந்​தி​யத் தொல்​லியல் துறை​யின் கட்​டுப்​பாடு​கள்​தான்.

புகழ்​பெற்ற பல்​வேறு கோயில்​கள் தொல்​லியல் துறை​யின் கட்​டுப்​பாட்​டுக்​குள் உள்​ளன. இதனால் இதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் தங்​கள் வீடு​களைப் புதுப்​பிக்​க​வும், கட்​டு​மானங்​களை மேற்​கொள்​ள​வும் கடும் கட்​டுப்​பாடு​கள் உள்​ளன.

நடுத்தர மக்​களின் வாழ்​வைப் பெரிதும் பாதிக்​கும் இந்த விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசுகள் ஒரு நிரந்​தரத் தீர்வை காண வேண்​டும் என்ற கோரிக்​கைகள் நீண்​ட​கால​மாக இருந்து வரு​கின்​றன.

வேட்பாளர்கள் பின்புலம்

இந்​தத் தொகு​தி​யில் திமுக சார்​பில் காஞ்​சிபுரம் மாவட்ட ஊராட்​சிக் குழு துணைத் தலை​வர் நித்யா போட்​டி​யிடு​கிறார். அதி​முக சார்​பில் கட்​சி​யின் மாவட்​டச் செயலரும், முன்​னாள் அமைச்​சரு​மான வி. சோமசுந்​தரம் போட்​டி​யிடு​கிறார்.

நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் வெற்​றிச் செல்​வி​யும், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் ரஞ்​சித்​கு​மாரும் களமிறங்​கு​கின்​றனர். திமுக வேட்​பாளர் நித்யா புதி​ய​வர். அதி​முக வேட்​பாளர் வி.சோமசுந்​தரம் ஏற்​கெனவே முன்​னாள் அமைச்​ச​ராக இருந்​தவர்.

முன்​னாள் அமைச்​சர் பண்​ருட்டி ராமச்​சந்​திரனுடன் இணைந்து எம்​.ஜி.ஆர். அதி​முகவை உரு​வாக்​கிய ரஞ்​சித்​கு​மார் அதில் இருந்து விலகி தவெக-​வில் இணைந்து அந்​தக் கட்சி சார்​பில் போட்​டி​யிடு​கிறார். நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் வெற்​றிச் செல்வி மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.​விசுவ​நாதம் பேத்​தி.

இந்​தத் தொகு​தி​யில் 4 முனைப் போட்டி இருந்​தா​லும் திமுக -அதி​முக இடையே​தான் நேரடிப் போட்டி நில​வு​கிறது. ரஞ்​சித்​கு​மார் பெரிய அளவில் வாக்​கு​களைப் பிரிப்​பார் என்று கூறப்​படு​கிறது.

அதே​போல், வெற்​றிச் செல்​வி​யும் நம்​பிக்​கை​யுடன் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். எனவே போட்டி பலமாக இருக்​கும். இருப்​பினும், கடைசி நேர பிரச்​சார யுக்​தி​களே வெற்றி தோல்​வியை நிர்​ண​யம் செய்​யும் என்​கின்​றனர் அரசி​யல் பார்வையாளர்​கள்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,33,825

பெண் - 1,42,437

மூன்​றாம் பாலினத்​தவர் - 37

மொத்த வாக்​காளர்கள் - 2,76,299

SCROLL FOR NEXT