காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, திருவான்மியூர் காந்தி கிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்து மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்கீழ் கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, காலை உணவுத்திட்டத்தை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றியது. அத்துடன் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 7,537 அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் விஜய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கலை முதல்வர் விஜய் பரிமாறினார். தொடர்ந்து மாணவர்களுக்கு நடுவில் தரையில் அமர்ந்து அவரும் சாப்பிட்டார். சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சாம்பார் பரிமாறப்பட்டது. சாப்பிட தொடங்குவதற்கு முன்பு, மாணவர்களைப் பார்த்து விஜய் சாப்பிட சொன்னார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவி தனஸ்ரீ, இறை வணக்கம் செய்துவிட்டு சாப்பிட வேண்டுமென சொன்னதும், முதல்வர் விஜய் நீங்கள் பாடுங்கள் என்றார்.
உடனே மாணவர்கள் ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’’ என்ற திருக்குறளைப் பாடினர். பிறகு மாணவர்களிடம் சாப்பிடலாமா என்று கேட்டுவிட்டு முதல்வர் விஜய் சாப்பிட்டார். தொடர்ந்து பள்ளியில் மற்ற வகுப்பறைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை நேரில் சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது ஒரு மாணவர் தண்ணீர் கேட்க, முதல்வர் தனது கையால் அவருக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு, அருகில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார்.
அதன்பின் பள்ளியில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். சுமார் 25 நிமிடம் முதல்வர் விஜய் பள்ளிவளாகத்தில் இருந்தார். முன்னதாக முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக் காரணமாகப் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களின் பைகள் பலத்த சோதனை செய்து பின்னர் அனுமதிக்கப்பட்டது.
சென்னை நடுநிலைப் பள்ளியில் ஏற்கெனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 199 மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 127 மாணவர்கள் இனி கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கிடையே இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஒட்டுமொத்தமாக 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 34.64 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், கு.ஜெகதீஸ்வரி, ரா.குமார், தலைமைச் செயலர் மு.சாய்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுட்டிக் குழந்தையின் ஆவல்: முன்னதாக முதல்வரைப் பார்க்க நீண்ட வரிசையில் பொதுமக்கள், இளைஞர்கள் நேற்று காத்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த குழந்தை ஒன்று, அமைச்சர் ஆனந்தைப் பார்த்து விஜய் மாமாவைப் பார்க்க வேண்டுமென தெரிவித்தது. அதற்கு அமைச்சர் ஆனந்த் விஜய் மாமா உங்களைப் பார்ப்பார். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று குழந்தைக்கு அறிவுரை வழங்கினார்.