சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு ‘மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும்’ என்று கமல்ஹாசன் குழப்பமான பதில் அளித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை - திருவள்ளுவர் சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். மற்ற வாக்காளர்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்” என்றார். தொடர்ந்து அவரிடம், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமா?” என கேள்வி எழுப்பியபோது, “மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும்” என்று குழப்பமான பதிலளித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஆழ்வார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, அவர்கள் மாற்றத்தை விரும்பி வாக்களிப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடையாறு தாமோதரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஆளுங்கட்சியான திமுக தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ளது. அதனால், அதிமுக கூட்டணி மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சியையும், சட்டம் ஒழுங்கையும் கருத்தில்கொண்டு புதிய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியான சூழல் மற்றும் வளர்ச்சி ஏற்பட அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்" என்றார்.