கமல்ஹாசன்

 
தமிழகம்

‘இந்தியாவில் அது நடக்காது...’ - எலான் மஸ்க் கருத்துக்கு கமல்ஹாசன் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: “இந்தியாவின் எதிர்காலத்தை எந்தவொரு வெளிநாட்டு சக்தியோ அல்லது கோடீஸ்வரரோ தீர்மானிக்க முடியாது” என்று எலான் மஸ்க் கருத்துக்கு மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, எந்தவொரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் கொள்கைகளை தீர்மானிக்க முடியாது. அலைக்கற்றை என்பது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த வியூக உள்கட்டமைப்பு என்பதால் அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது.

அமெரிக்கா தனது உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதையும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹூவாவே நிறுவனத்துக்கு தடையும் விதித்துள்ளது. தங்களுக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் தடையற்ற சந்தை பற்றி மேற்கத்திய நாடுகள் பேசக் கூடாது.

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இணையத்தை வழங்கி கோடிக்கணக்கான மக்களை இணைத்துள்ளது இந்தியத் தொலைத்தொடர்பு. எனவே, எங்கள் நாட்டின் எதிர்காலத்தை எந்தவொரு வெளிநாட்டு சக்தியோ அல்லது கோடீஸ்வரரோ தீர்மானிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதளப் பதிவில், “இந்தியாவின் உண்மையான பிரதமர், ரிலையன்ஸ் தலைவர் அம்பானி தானா? இணையவசதி இல்லாத இந்தியக் கிராமப்புறங்களுக்கும், பேரிடர்கால மீட்புப் பணிகளுக்கும் ஸ்டார்லிங்க் அத்தியாவசியமானது. ஆனால் அம்பானி தனது ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைக்க ஸ்டார்லிங்க் சேவையை தடுக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாஜக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மாநில தலைவர் இரா.அர்ஜுனமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மோடியை குறிவைத்து, அம்பானியை எலான் மஸ்க் நையாண்டி செய்திருப்பது இந்திய ஜனநாயகத்தை கேள்வி எழுப்புகிறது.

எங்கள் நாட்டின் மீது எவரும் தங்களது மேலாதிக்கத்தை திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தியா நட்பை மதிக்கும். ஆனால் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க் பதிவுக்கு எதிர்வினையாற்றிய மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை அமைச்​சர் ஜோதி​ராதித்யா சிந்தியா, “இந்தியாவில் எந்​தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனு​மதி இல்லை” என்று குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT