“டெல்லி எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கிறது தவெக அரசு” - ஸ்டாலின் சாடல்

“டெல்லி எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கிறது தவெக அரசு” - ஸ்டாலின் சாடல்
Updated on: 
1 min read

சென்னை: “ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்து தமிழகத்தில் உள்ள மூடர்கூடத் தவெக அரசு தனது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுள்ள பதிவில், ‘மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதல்வர்களான பிணராயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பனர்ஜி, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை மத்திய பா.ஜ.க. அரசு தடுப்புக் காவலில் அடைத்துள்ளது.

ஆனால், தேசத்துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

எஸ்ஐஆர் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனியும் அதை மறைக்க முடியாது. டெல்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணையச் சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் மத்திய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மூடர்கூடத் தவெக அரசு, தனது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக எஸ்ஐஆருக்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“டெல்லி எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கிறது தவெக அரசு” - ஸ்டாலின் சாடல்
“ராகுல் காந்தியை சந்திப்பதால் முதல்வர் விஜய்க்கு நேரம்தான் வீண்” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in