சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்ட காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான யானைகள்.
காஞ்சிபுரம்: திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 பெண் யானைகள், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டன. அந்த யானைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சை, கூடுதல் பராமரிப்புக்காக திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள வனத்துறை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நீதிமன்ற உத்திரவைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த யானைகளை மீண்டும் சங்கர மடத்திடம் ஒப்படைக்க வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி நேற்று காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் இந்த யானைகள் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த யானைகள்கோனேரிக்குப்பத்தில் உள்ள கஜசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது அந்த யானைப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு யானைகளுக்கான சிறப்பு பூஜைகளை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு காமாட்சி அம்மன் கோயில் யானைகள் காஞ்சிபுரம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.