பிரதிநிதித்துவப் படம்
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் முதல் 11 முக்கியத் துறைகளின் தலைமை அதிகாரிகள் வரை பெண்களே துறை தலைமை அதிகாரியாக செயல்படுவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கடந்த மே மாத இறுதியில் பத்மஜா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஷானாஸ் மே 20-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
வருவாய் துறையை பொறுத்தமட்டில் மாவட்ட வருவாய் அலுவலராக ஆர்.ஜீவா, மகளிர் திட்ட அலுவலராக அ.லலிதா,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கார்த்திகா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சித்ரசேனா, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் பேபிகலா, மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக வசந்தலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலராக மு.செ.அருணா, மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வராக பவாணி உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத் திட்ட(ஊரக வளர்ச்சித்துறை) தலைமை அதிகாரியாக ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் திட்ட அலுவலராக பணிபுரிந்து வரும் கவிதா என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் சார்ந்த முக்கிய பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இம்மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஷ்ரவன்குமார் என்பவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை தலைமை அலுவலர்களாக இருக்கும் பெண்களின் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது” என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.