இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் 
தமிழகம்

தமிழகத்தின் தலைகுனிவுக்கு முதல்வர் விஜய்தான் காரணம்: இந்து முன்னணி கருத்து

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் தடைகள் வந்தாலும் தர்மமே வெல்லும் என்பதை உலகம் அறிந்துகொள்ளும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது அதிகாரத்தை மறந்து அரசியல்வாதிகளின் அடிவருடியாக அடிமையாக செயல்பட்ட மதுரை மாவட்ட கலெக்டரின் பொறுப்பற்ற செயலை இன்று உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஜோசப் விஜய் தான் மாநிலத்தின் தலைகுனிவுக்குக் காரணம். இந்து விரோத வஞ்சத்தை நெஞ்சில் கொண்டு தவெக ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சி இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டது. அதனால் மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பகிரங்க பொது மன்னிப்பு கேட்டனர்.

இந்நிலையில், தனது மைனாரிட்டி ஆட்சியை தக்க வைத்துக்  கொள்ள ஜோசப் விஜய், கூட்டணி கட்சிகளின் கெட்ட எண்ணத்துக்கு தமிழகத்தின் மானத்தை விற்றுவிட்டார் என்பதே உண்மை. அதனை மறைக்க எத்தனை பொய்களை பேசியும் எத்தனை நாடகங்களை நடத்தியும் மக்களை ஏமாற்றினார்.

மாலை 4 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மாவட்ட கலெக்டர் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளும் தயார் என்று உறுதி அளித்தது பொய்தானே? 

பிறகு அறங்காவலர்கள் ஒத்துழைக்கவில்லை என்று மற்றுமொரு பொய். மாவட்ட கலெக்டரின் அதிகாரம் பெரிதா? அறங்காவலர் குழு அதிகாரம் பெரிதா?

மேலும் ஸ்தானீகர்களின் ஆலோசனையின்படி என்று பொய் சொன்ன உடனே பட்டர்களும் ஸ்தானீகர்களும் மறுத்தனர். உடனே அவர்களை மிரட்டி பணிய வைக்க அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கே சென்றனர். இத்தனை நாடகமும் கலெக்டரை காப்பாற்றவில்லை. அவரது முகத்திரையை உச்ச நீதிமன்றம் கிழித்து தொங்கவிட்டுள்ளது.

ஜோசப் விஜய் நிர்வாகத்தில் கீழ்படிந்து எத்தனை அதிகாரிகள் தங்கள் மரியாதையை இழக்கப் போகிறார்களோ?  அரசு அதிகாரிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு ஆயுள் ஐந்தாண்டுகள் தான். கடந்த திமுக ஆட்சி இப்போது இல்லை. அடுத்த முறை தவெக ஆட்சி திரும்புமா என்பது நிச்சயமில்லை. ஆனால் சட்டத்தை, நிர்வாகத்தை பேணிக் காக்க வேண்டிய உங்கள் பதவி நிரந்தரமானது என்பதை உணர்ந்து அரசியல்வாதிகளின் அநியாய செயலுக்கு உடன்பட்டு நடக்காதீர்கள்.

தர்மம், நீதி, நேர்மை தான் நிர்வாகத்துக்கு பெருமை சேர்க்கும். இவற்றின் காவலனாக இருப்பது தெய்வமாகிய முருகப்பெருமான். அதனால் தான் நம் பெரியோர்கள் கூறினார்கள், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையும், போராட்டமும் ஆகும். இதற்காக இந்து முன்னணி கடந்த 35 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வந்தது. 

ஒவ்வொரு பக்தனும் மலையில் தனது கைகளால் தீபம் ஏற்றி வழிபடலாம் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு இந்து முன்னணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றியை கொண்டாடிட முருக பக்தர்கள் தமிழகத்தில் எல்லா திருக்கோயில்களிலும் தீபம் ஏற்றிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT