தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி பேசினார்.
ஓசூர்: தவெக தூய கட்சி அல்ல..கலப்படக் கட்சி என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கே.பி.முனுசாமி பேசியதாவது: தவெக தூய கட்சி என விஜய் பேசியுள்ளார். உங்களின் நடவடிக்கை என்ன என தெரியாது, ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என தெரியாது.
திட்டத்தை ஒழுக்கமாக நிறைவேற்றுவீர்கள் என தெரியாது. ரசிகர்களை கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தனித்துவமான கட்சி என்று சொல்லலாம்.
ஆனால், தற்போது தவெகவில் பல கட்சிகளிலிருந்து வந்தவர்கள் உள்ளனர். வந்தவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள். வசதிக்காகவும், புதிய தலைமை பொறுப்புக்காகவும், பதவிக்காகவும் வந்தவர்கள். ஒருவர் திமுகவிலும், பின்னர் விசிகவிலும், தற்போது தவெகவிலும் உள்ளார்.
மற்றொருவர் அதிமுகவிலிருந்து சென்ற செங்கோட்டையன். 53 ஆண்டு களாக அதிமுகவில் எல்லாப் பதவிகளையும் அனுபவித்தார். அமைச்சராக்கி பதவி கொடுத்தது அதிமுக. வாய்ப்புகளையும், பதவிகளையும் அனுபவித்து கொண்டு அதிமுக தலைமைக்கு எதிராக பொதுவெளியில் விமர்சித்தவர்.
இங்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி என்றவர் அங்கு புரட்சி தளபதி என பேசுகிறார். தவெக தூய கட்சி அல்ல.. கலப்படக் கட்சி. எங்கு வாய்ப்பு கிடைக்கும் என சுத்துகின்ற கூட்டம் விஜய்யுடன் சென்றுள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.