

ஒரு நாட்டின் பொருளாதார நலனைப் புரிந்து கொள்ளும் மொழி பொருளாதார தரவு. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி மற்றும் பணவீக்கம் போன்ற எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை அரசின் கொள்கைகள், வணிகத் தீர்மானங்கள், மேலும் இளம் தொழில்முனைவோரின் தொழில் தேர்வுகளையும் வடிவமைக்கின்றன.
இந்தியாவின் ஜிடிபி மற்றும், நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) தரவின் தரம் குறித்து சமீபத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கடந்த நவம்பர் 27-ல் வெளியிட்ட ஆண்டறிக்கையில் செயல்முறை பலவீனங்கள் மற்றும் தரவு இடைவெளிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் தேசிய கணக்குகளை (ஜிடிபி உட்பட) ‘C’ என மதிப்பிட்டுள்ளது. இது அதன் தரப்படுத்தலில் இரண்டாவது குறைந்த நிலை. முதல் குறைந்த நிலை B ஆகும்.
ஐஎம்எப் அறிக்கை பற்றி கடந்த டிசம்பர் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஐஎம்எப் உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் தரவை ஏற்றுக்கொண்டதால், தரவுகளின் தரம் குறித்த கவலைகளை நிதியமைச்சர் நிராகரித்தார். ஐஎம்எப் தரவை கேள்வி கேட்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஐஎம்எப் தரப்படுத்தும் முறை: ஐஎம்எப் தனது தரவு கட்டமைப்பு மதிப்பீடு (Data Quality Assessment Framework) மூலம், உலக நாடுகளின் புள்ளிவிவரங்களை, நேர்மை (Integrity), முறைமையியல் வலிமை (Methodological Soundness), துல்லியம் & நம்பகத்தன்மை (Accuracy & Reliability), சேவைத் திறன் (Serviceability), அணுகல் (Accessibility) ஆகிய 5 பரிமாணங்களில் மதிப்பிடுகிறது. இதன் அடிப்படையில், A மிக உயர்ந்த தரம், B நம்பகமானது, C பலவீனமானது, D மிகக் குறைந்த தரம் 4 ஆக பிரிக்கிறது.
பழைய அடிப்படை ஆண்டை (Base Year) 2010-11 பின்பற்றுவதாகவும், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், மற்றும் GST/UPI தரவுகளை பொருளாதார தரவுகளில் முழுமையாக இணைக்கவில்லை என்றும் கூறி, இந்தியாவுக்கு C மதிப்பீடு வழங்கி உள்ளது.
ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தரவு ஏன் முக்கியம்?
* ஜிடிபி: நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் தலைப்பு குறியீடு.
* நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ): அன்றாட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்கிறது. இது பணவீக்கத்தின் முக்கியமான அளவுகோல், நாணயக் கொள்கை, தொழிலாளர் ஊதியம் மற்றும் ஊதிய திருத்தம் பேச்சுவார்த்தைகளை வழிநடத்துகிறது.