தமிழகம்

அரசு வழக்கறிஞர்களுக்கு அளவாகவே கட்டணம் வழங்க வேண்டும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: அரசு வழக்கறிஞர்களுக்கு அளவாகவே கட்டணம் வழங்க வேண்டும். சிலருக்கு தன்னிச்சையாக கட்டணத்தை அள்ளி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமலை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சி வழக்கறிஞராக 1992 முதல் 2006 வரை பணிபுரிந்தேன். இதற்காக எனக்கு ரூ.13,05,770 கட்டணம் வழங்க வேண்டும். இதுவரை கட்டணப் பாக்கியைத் தராமல் உள்ளனர். கட்டணப் பாக்கியை வழங்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் சட்ட அலுவலர்கள், மூத்த வழக்கறிஞர்களுக்கு அதிக கட்டணம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு ரூ.4 லட்சம் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கப் போதுமான நிதியில்லை என்று சொல்லும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம், வழக்கறிஞருக்கு வாரி வழங்க சிரமப்படுவதில்லை. புதிய அரசு வழக்கறிஞர்கள் கையாளும் வழக்குகளில்கூட தேவையில்லாமல் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். இது கட்டணத்துக்காகவே.

நீதிமன்றத்தில் ஆஜராவது என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயமாகிவிட்டது. இதனால் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் குறித்து தணிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அதே நேரம் வழக்கறிஞர்கள் கட்டணம் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது. வழக்கறிஞர்களுக்கு தேவையான கட்டணத்தை பொது கருவூலத்திலிருந்து அளவாக எடுத்துக்கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கு தன்னிச்சையாக கட்டணத்தை வாரி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வழக்கிலும் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராக முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராகும் வகையில் வழக்கின் தன்மை இருக்க வேண்டும். பல்வேறு தரப்பினரை திருப்திப்படுத்த அதிகளவில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு டஜன் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருப்பது சங்கடமான நிலையாகும்.

விசாரணை நடைபெறும் போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் வேறு நீதிமன்றத்தில் இருந்தால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசு வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படும். இதுபோன்ற நடைமுறை மதுரை அமர்வில் 2026-ல் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.

இந்த வழக்கைப் பொருத்த வரை, ‘தொழிலாளர்களின் வியர்வைத் துளிகள் காய்வதற்கு முன்பு அவர்களுக்கான கூலியைக் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் நபிகள் நாயகத்தின் கோட்பாட்டை மேற்கோள் காட்டலாம்.

அதன்படி மனு தாரர் தனது வேலைக்கான கூலியைக் கேட்டுள்ளார். வறுமையில் உள்ள அவர் மாநகராட்சிக்கு, தான் ஆஜரான வழக்குகளின் பட்டியலுடன் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரிடம் மனு அளிக்க வேண்டும். அதைச் சரிபார்த்து ஆணைக்குழுத் தலைவர் சான்றிதழ் வழங்க வேண்டும். அந்தச் சான்று அடிப்படையில் மனுதாரருக்கு கட்டணப் பாக்கியை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT