

சத்திரம் வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய அதிகாரிகள்.
குமுளி: ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சத்திரம் புல்மேடு வனப்பாதை ‘அளவுக்கு மீறி’ வர்ணிக்கப்படுவதை நம்பி வரும் ஸ்பாட் புக்கிங் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஸ்பாட் புக்கிங் திட்டத்தில் தினமும் ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க வனத்துறையினர் மற்றும் தேவசம் போர்டு அதி காரிகள் முடிவு செய்துள்ளனர்.
சத்திரம் வனப்பாதை வழியே 12 கி.மீ. தொலைவில் சபரிமலை சந்நிதானத்துக்குச் செல்லலாம். தூரம் குறைவு என்றாலும் கடுமையான ஏற்றம், இறக்கம், அடர் வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. யானைகளின் குறுக்கீடு, ஆளுயுர புல்வெளி, காட்டுமாடுகள், புலிகள், செந்நாய்களின் நடமாட்டம் மற்றும் அட்டைகள் தொந்தரவும் அதிகம்.
இப்பாதையில் செல்லும் பக்தர்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது. சந்நிதான சிறப்பு அதிகாரி பி.பாலன்நாயர், கோட்ட வன அதிகாரி வினோத்குமார் தலைமையில் இச்சோதனை நடைபெற்றது. முகாம் மருத்துவ அதிகாரி தீபு கிருஷ்ணன் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல், காயங்கள், இதய முதலுதவி, அட்டைக்கடி உள்ளிட்ட பல சிகிச்சைகளும் இதில் அடங்கும் என்றார். மாவட்ட வன அதிகாரி வினுத் குமார் கூறுகையில், ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் சத்திரம் வனப்பாதை குளிர்ச்சியாகவும், நடந்து செல்ல எளிதாகவும் உள் ளது என்று பதிவிடுகின்றனர். மேலும் அருகிலேயே வனவிலங்குகளைப் பார்க்க முடியும்.
தூரத்தில் தெரியும் சபரிமலையை காணலாம் என்று உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு மீறி வர்ணிக்கின்றனர். இதை நம்பி வரும் ஸ்பாட் புக்கிங் பக்தர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து விட்டது. தங்களின் உடல் திறனை உண ராமல் வருவதால் பலருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்படு கிறது. இவர்களை மீட்பதிலும், முதலுதவி அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன, என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் செல்ல கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஸ்பாட் புக்கிங் திட்டத்தில் தினமும் ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழியே பயணிக்க ஏற்கெனவே ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. பெருவழிப்பாதை வழியே வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமை இதுவரை வழங்கப்படவில்லை என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.