சென்னை: பணியில் இருக்கும்போது போக்குவரத்து போலீஸார் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழக டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்துக்கு வரும் வழியில் இந்த விபத்தைக் கண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ். போக்குவரத்து பணியில் உள்ள போலீஸார் செல்போனில் பேசுவதிலும், பாட்டு கேட்பதிலும், வீடியோக்கள் பார்ப்பதிலும் தீவிரம் காட்டுவதால் தான் இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாக கருத்து தெரிவித்திருந்தார்.
பணியில் இருக்கும்போது போக்குவரத்து போலீஸார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழக டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, போக்குவரத்து போலீஸார் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பித்தாலும், சென்னையில் உள்ள போக்குவரத்து போலீஸார் நெரிசல் மிகுந்த நேரங்களிலும் டிராபிக் சிக்னலின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இல்லையெனில் செல்போனில் வீடியோ பார்க்கின்றனர். இதை இன்று கூட நான் நீதிமன்றத்துக்கு வரும் வழியில் பார்த்தேன். பணியின்போது இதுபோல செயல்படக்கூடாது என போக்குவரத்து போலீஸாரிடம் விழிப்புணர்வு இருப்பது இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர், “போக்குவரத்து போலீஸார் இதுபோல பணியின்போது செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்