தமிழகம்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு டிச.11 வரை நீதிமன்ற காவல்: கடலூர் சிறையில் அடைப்பு

வேட்டையன்

கடலூர்: பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கடலூர் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக தகவல் வெளியாயின. கடந்த ஜூலை மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், வழக்கை விசாரித்து, விசாரணை அதிகாரிகளை நியமித்து, அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே கடந்த 23-ம் தேதி பாதிக்கப்பட்ட அதிகாரியிடம், மாவட்ட எஸ்பி ஷானாஸ் புகாரைப் பெற்றார். இந்தப் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தியாகதுருகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிச.11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடலூர் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT