சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரிய வழக்கி்ன் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கரூரில் கடந்த செப்.27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலி்ல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடு- ஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டது. இதன்மீது கருத்து தெரிவிக்க தவெக, அதிமுக உள்ளிட்ட மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பரிந்துரைகள், கருத்துகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
தவெக பதில் மனு: இந்த வழக்கில் தவெக தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு வருகை தரும் கர்ப்பிணிகள், குழந்தைகள், மூத்த குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும் என்றாலும், சட்டம் - ஒழுங்கு என வரும்போது அவர்களை பாதுகாக்கும் முதன்மை பொறுப்பு போலீஸாருக்கும், அரசுக்கும்தான் உள்ளது. இந்த விசயத்தில் அரசும், போலீஸாரும் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
கட்சி பாகுபாடும் பார்க்காமல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தன்னார்வலர்களை பணியமர்த்தினாலும் போலீஸாரும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு முன்பாக கூட்டம் கூடக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. சுயவிருப்பம் அடிப்படையில் கூடும் கூட்டத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பொறுப் பாளியாக்கக் கூடாது. கூட்டத்துக்கு வெளியே நடக்கும், குறிப்பாக பயணங்களின்போது நடைபெறும் அசம்பாவித நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது பழி சுமத்தக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.