மதுரை: விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் மரபணுச் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசாரணை சரியான முறையில் நடப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த மனுதாரர் மாரீஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மாணவி வழக்கில் சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த ரத்த மாதிரி, சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. சம்பவ நேரத்தில் அப்பகுதியில் பதிவான 1,600 செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். 212 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. சுற்றியுள்ள பகுதிகளில் 24 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. எஸ்பி தலைமையில் காவல் ஆய்வாளரும் மற்றும் 10 சிறப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் புகாரை அலட்சியமாகக் கையாண்டதற்காக போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்டதாவது: மாணவியை இரண்டுக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர்.
மாணவி மாயமானது தொடர்பாக மார்ச் 10-ல் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெறாமலேயே மகளிர் காவல் நிலையம் செல்லுமாறு போலீஸார் கூறினர்.
அடுத்தநாள் (மார்ச் 11) குளத்தூர் போலீஸார் வழக்குப் பதிய மறுத்துவிட்டனர். மாணவியின் உடல் மீட்கப்பட்ட பிறகே வழக்கு பதிந்தனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக்கோரி போராட்டம் நடத்திய பிறகே எஸ்பி சம்பவ இடம்வந்தார். மார்ச் 10-ல் வழக்குப் பதிந்து மாணவியைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் கொலையைத் தடுத்திருக்கலாம்.
சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் செல்லக் கூடாது என மாணவியின் குடும்பத்தினரை போலீஸார் அச்சுறுத்தினர். இவ்வாறு அவர் வாதிடப்பட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது.
உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்துவது, சமூக ஊடகங்கள் வழியாகவும், அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பிலும் அழுத்தம் கொடுப்பது விசாரணையைப் பாதிக்கும்.
அழுத்தம் கொடுப்பதால் மட்டும் ஒரு வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியாது. அவசரப்படுத்துவது உண்மையான குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமையும். சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோதுமான தண்டனை அல்ல. மாணவியின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் பெற்றோர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அறிவியல்பூர்வமாக விசாரணை நடைபெறும்.
விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்.2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.