மதுரை: மானாமதுரை இளைஞர் மரண வழக்கில் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்ட பிறகும் உடலை வாங்காமல் அரசியல் செய்வது ஏன் என உயர் நீதிமன்றம நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாரை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், உடலுக்கு இறுதிமரியாதை செலுத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் வாதிடும் போது, ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொலை வழக்காக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. நீதித்துறை நடுவர் 196 பிரிவின்கீழ் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகதனி நீதிபதி முன் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆகாஷின் பெற்றோர் தரப்பு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் ஆகாஷின் உடலை உறவினர்கள் இன்னும் வாங்காமல் உள்ளனர் எனக் கூறினர்.
மனுதாரர் தரப்பில், ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாரை கைது செய்யாததால் போராட்டம் நடத்துவதாக கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உடலைப் பெற வேண்டாம் என தடுத்தது யார், நீதிமன்றத்தை தனிப்பட்ட விருப்பத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.
உடல் அழுகிப் போக வேண்டும் என விரும்புகிறீர்களா. இதுபோன்ற வழக்குகளை ஏற்க முடியாது. இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டும் இன்னும் உடலைப் பெறாமல் இருப்பது ஏன், உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
தற்போது உடலை வைத்துப்போராடுவது பேஷனாக உள்ளது. இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அவசியமானது. அது அடிப்படை உரிமையும்கூட. இதனை இறந்தவரின் குடும்பத்தினர் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.