சென்னை: சாலை நடுவிலும், சாலை ஓரத்திலும் அத்துமீறி கொடிக் கம்பங்களை அமைக்கும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்.28-க்குள் அகற்றுமாறு கெடு விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. அதன்படி, கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல, மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
சாலை நடுவிலும் (சென்டர் மீடியன்), சாலை ஓரத்திலும் தற்காலிக கொடிக் கம்பம் அமைப்பது தொடர்பாகவும் அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ, மாநாடு போன்ற நிகழ்வுகளுக்கு தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்கும்போது, ஒவ்வொரு கொடிக் கம்பத்துக்கும் தலா ரூ.1,000 வாடகை வசூலித்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்’ என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதி இளந்திரையன் முன்பு இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைக்க வாடகை வசூலிக்கப்பட்டது மற்றும் விதிகளை மீறிகொடிக் கம்பங்கள் அமைத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து 37 மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது: பொதுமக்களுக்கு பாதிப்பு சாலை நடுவே தற்காலிக கொடிக் கம்பம் அமைக்கக் கூடாது என உத்தரவிட்டும், சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் மக்களி்ன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே 10 அடி உயரத்துக்கு கொடிக் கம்பங்கள் நடப்படுகின்றன.
இவற்றால் விபத்துகள் ஏற்பட்டு தொடர் மரணங்கள் நிகழ்கின்றன. சமீபத்தில்கூட துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் ஏராளமான தற்காலிக கொடிக் கம்பங்கள் நடப்பட்டன. இதனால் பாதிக்கப்படுவது சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள்தானே தவிர, கார்களில் செல்லும் விஐபிக்கள் அல்ல.
பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது. எனவே, தற்காலிக கொடிக் கம்பங்களுக்கும் முன்பணம் வசூலிக்க வேண்டும். மேலும், கட்சியினர் அமைக்கும் தற்காலிக கொடிக் கம்பங்கள் குறித்து எந்த அதிகாரியும் கேள்வி கேட்பதில்லை. எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்புதான்.
இதனால்தான் சாலை நடுவிலும், சாலை ஓரமும் அத்துமீறி கொடிக் கம்பங்களை நடுகின்றனர். இனி அதுபோல எந்த கொடிக் கம்பமும் அமைக்கப்பட வில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அத்துமீறி அமைக்கப்பட்டால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல் களை தலைமைச் செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜன.6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.