தமிழகம்

மாம்பழத்துக்குப் பதிலாக அன்புமணிக்கும் பொது சின்னம் வழங்க ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மாம்​பழத்​துக்​குப் பதிலாக அன்​புமணிக்​கும் பொது சின்​னம் ஒதுக்க வேண்​டும் என ராம​தாஸ் தரப்​பில் விடுக்​கப்​பட்ட கோரிக்​கையை ஏற்க மறுத்த நீதிப​தி, இந்த வழக்கு விசா​ரணையை இன்​றைக்கு தள்ளி வைத்​துள்​ளார்.

பாமக யாருக்கு சொந்​தம் என்​பது தொடர்​பான உள்​கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை மாம்​பழம் சின்​னத்தை முடக்கி வைக்​கக்​கோரி ராம​தாஸ் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு அவசர வழக்​காக நீதிபதி டி.​வி. தமிழ்​செல்வி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்​டது.

          

அப்​போது, ராம​தாஸ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் மகாவீர் சிவாஜி, அருள் ஆகியோர், ``அன்​புமணியை பாமக​வில் இருந்து நீக்​கி​விட்​டோம். தற்​போது அவர் அடிப்​படை உறுப்​பினர் கூட இல்​லை. போலி​யான ஆவணங்​களை தேர்​தல் ஆணை​யத்​தில் சமர்ப்​பித்து மாம்பழ சின்​னத்​தைப் பெற்​றுள்​ளார்.

எனவே, யாருக்​கும் மாம்பழ சின்​னத்தை ஒதுக்​கக்​கூ​டாது. எங்​களைப் போலவே அன்​புமணிக்​கும் பொது​வான வேறு ஒரு சின்​னத்தை ஒதுக்கி யாருக்கு செல்​வாக்கு உள்​ளது என்​பதை நிரூபிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும் என, வாதிட்​டனர்.

அப்​போது நீதிப​தி, தேர்​தலுக்கு இன்​னும் சில நாட்​களே உள்ள நிலை​யில் வேட்​புமனுக்​களும் பரிசீலிக்​கப்​பட்டு கடைசி கட்​டத்​தில் உள்​ளது. இந்த சூழலில் மாம்​பழம் சின்​னத்தை முடக்​கி​னால் அது பாமக-வுக்​குத்​தானே பாதிப்பை ஏற்​படுத்​தும், என்​றார்.

அதற்கு ராம​தாஸ் தரப்​பில், ‘‘அன்​புமணி தற்​போது 18 தொகு​தி​களில் தான் போட்​டி​யிடு​கிறார். அப்​படி​யென்​றால் அந்த 18 தவிர்த்த மற்ற தொகு​தி​களில் போட்​டி​யிடும் எங்​கள் தரப்​புக்​கும் மாம்​பழம் சின்​னத்தை ஒதுக்க வேண்​டும், என கோரப்​பட்​டது.

அதற்கு அன்​புமணி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் என்​.எல்​.​ராஜா, சித்ரா சம்​பத் ஆகியோர், ``தேர்​தலில் நடை​முறை​களில் பாதி​யைத் தாண்டி விட்​டோம். வேட்​புமனுக்​கள் பரிசீலிக்​கப்​பட்டு சின்​ன​மும் இறுதி செய்​யும் தரு​வா​யில் உள்​ளது. பேருந்து புறப்​பட்டு பலமணி நேர​மாகி விட்​டது.

இனி அதை விரட்​டிப்​பிடிக்க முடி​யாது. அவர்​கள் வேண்​டுமென்​றால் இதுதொடர்​பாக தேர்​தல் வழக்கு தொடரலாம்’’, என்​றனர். தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், ‘‘பாமக தற்​போது பதிவு செய்​யப்​பட்ட கட்சி மட்​டுமே.

அங்​கீகரிக்​கப்​பட்ட கட்சி அல்ல. மாம்​பழச் சின்னம் தற்​போது பொதுப்​பட்​டியலில் உள்​ளது. அதை முடக்க வேண்​டும் எனக்​கோர முடி​யாது. இதற்கு முன்​பாக பாமக அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக இருந்​த​தால் அப்​போது ஒதுக்​கப்​பட்ட மாம்​பழச்​சின்​னம் தற்​போதும் முன்​னுரிமை அடிப்​படை​யில் ஒதுக்​கப்​படு​கிறது.

தேர்​தல் நடை​முறை​கள் ஏற்​கனவே தொடங்​கி​விட்ட நிலை​யில் சின்​னங்​கள் ஒதுக்​கீடு தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு எந்த உத்​தர​வும் பிறப்​பிக்க முடி​யாது’’, என்​றார்.

அதையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசா​ரணையை இன்​றைக்கு (10-ம் தேதி) தள்ளி வைத்​தார். அப்​போது குறுக்​கிட்ட ராம​தாஸ் தரப்பு வழக்​கறிஞர்​கள், அது​வரை அன்​புமணி தரப்​புக்கு மாம்​பழம் சின்​னத்தை ஒதுக்​கக்​கூ​டாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும், எனக் கோரினர். ஆனால்​ நீதிப​தி, அந்​த கோரிக்​கை​யை ஏற்​க முடி​யாது என மறு​ப்​பு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT