தூத்துக்குடி: வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா நேற்று குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்கு முன்னதாக தர்ம முனீஸ்வரனிடம் நீதிபதி, “உங்களை சார்ந்து உங்கள் குடும்பத்தில் யாரும் உள்ளனரா” என்று கேட்டார். பின்னர், “உங்கள் தாய் மட்டும்தான் உங்களுடன் இருக்கிறார். உங்கள் மனைவியும், மகளும் உங்களை பிரிந்து சென்று விட்டனர்.
ஏற்கெனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, அந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நீங்கள் செய்துள்ள இந்த சம்பம் கொடூரமானது.
மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக படித்த போதுதான் நீங்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டீர்கள் என்பது தெரியவந்தது.
உங்கள் மகள் போன்ற ஒரு குழந்தையை இது போன்று கொடூரமான செயலில் ஈடுபட்ட போது உங்கள் மகளின் நினைவு வரவில்லையா, அந்த குழந்தையை பாதுகாக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? இந்தகொடுர செயலுக்கு உங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் அது சரியாகாது.
அரசு தரப்பில் குற்றத்துக்கு ஏற்ப பெரிய தண்டனையாக வழங்க வேண்டும் என வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் உங்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை குறைப்பதற்காக, உங்கள் தரப்பில் ஏதாவது ஒரு காரணம் இருக்குமா என ஆய்வு செய்ததில், எங்களுக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை.
உங்களுக்கு விதிக்கப்படும் இந்த தண்டனை, பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். அதன்பிறகு இரட்டை தூக்கு தண்டனை அறிவித்தார்.
வழக்கு கடந்துவந்த பாதை
மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த மார்ச் 12-ம் தேதி கிராம மக்கள் 12 மணி நேர மறியலில் ஈடுபட்டனர். புகாரை பெறாமல் அலட்சியமாக செயல்பட்ட விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா மார்ச் 12-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். போலீஸாருக்கு சம்பவம் நடைபெற்று 9 நாட்களாக எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறினர்.
இந்நிலையில், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் கொடுத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த காற்றாலை கோபுர சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் மார்ச் 19-ம் தேதி கைது செய்தனர்.
இதுதொடர்பாக குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மார்ச் 20-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை அழைத்து வந்து சம்பவம் குறித்து நடித்து காண்பிக்கச் செய்து போலீஸார் அதை வீடியோ பதிவு செய்தனர்.
குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மார்ச் 20-ம் தேதி பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் சடலத்தை பெற்று 10 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்தனர்.