ஜோதிமணி எம்.பி.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஜோதிமணி எம்.பி. ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.
இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அரவக்குறிச்சி தொகுதியைத் திமுகவிடம் காங்கிரஸ் தலைமை விட்டுக்கொடுத்ததை ஜோதிமணி கடுமையாக எதிர்த்தார். இப்போதும் தனக்கு வேண்டியவர்களுக்கோ அல்லது தகுதியானவர்களுக்கோ தொகுதிகளை ஒதுக்காமல், தலைமை தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர் கருதுவதாக தெரிகிறது.
தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் தனக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதும் அவரது ஆதங்கத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஜோதிமணியின் இந்த பகிரங்கப் புகாரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்குமா அல்லது சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.