ஜோதிமணி எம்.பி
கரூர்: “ஜனநாயகத்தில் வாக்கை விட வலிமையான சக்தி ஏதுவுமில்லை. தவறாமல் வாக்களிப்போம்” என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் இன்று (ஏப். 23ம் தேதி) காலை கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வாக்களித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் நான் படித்த எமது பெரியதிருமங்கலம் அரசினர் ஆரம்பப் பள்ளியில் வாக்களிப்பதில் பெருமை. ஜனநாயகத்தில் வாக்கை விட வலிமையான சக்தி ஏதுவுமில்லை. தவறாமல் வாக்களிப்போம்” என தெரிவித்தார்.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி அவரது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இரு மாதங்களாக தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்தது. மக்கள் விறுவிறுப்பாக ஆர்வத்தோடு வாக்கு செலுத்தி வருகின்றனர். மக்களின் இந்த ஆர்வத்தை பார்க்கும்போது கண்டிப்பாக ஜெயலலிதா ஆட்சி வரும். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார்.
கரூர் தொகுதியில் ஜனநாயகத்துக்கும் பணநாயத்துக்கும் இடையே தேர்தல் நடைபெறுகிறது. கரூர் தொகுதியில் 50,000 வாக்குககள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். சினிமா மோகம் காரணமாக தவெகவுக்கு இளைஞர்கள் வாக்களிக்கலாம். நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
கரூர் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ வாக்களிப்பார் என கூறப்பட்ட நிலையில், அவரது தம்பி ஆர்.வி.அசோக்குமார் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாவட்டம் முழுவதும் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெறும். மீண்டும் 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராவார்’ என்றார்.
கரூர் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சூடானதால் 10 நிமிடங்களுக்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.