சென்னை: ஜப்பானில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2 வெண்கலப் பதக்கங்களை வென்று நம்நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார். இவரது சாதனையைப் பாராட்டும் விதமாக, ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.60 லட்சத்துக்கான ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி ஜோஷ்னா சின்னப்பாவின் விளையாட்டுத் திறனை அங்கீகரித்து அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறையில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த அவர், தற்போது இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஜோஷ்னா சின்னப்பாவுக்கு நேற்று நேரில் வழங்கினார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 பதக்கங்கள் வென்றுள்ளார். 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சாதிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாகவே இந்த பதவி உயர்வு அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.