ஜான் பாண்டியன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஜெம் வீரமணி விவகாரத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” - ஜான் பாண்டியன்

ஆ.அருள்தாசன்

திருநெல்வேலி: “ஜெம் வீரமணி விவகாரத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பு இல்லை. எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தமிழகம் கட்சியினர் திட்டமிட்டு பொய்யை பரப்புகிறார்கள்” என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாந்தி என்ற பெண் உட்பட மொத்தம் 4 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வீரமணி விவகாரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், தன்னையும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி என்ற பெண்ணையும் மிரட்டியதாகவும், வீரமணிக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் செயல்பட்டதாகவும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜான் பாண்டியன் கூறியது: “வீரமணி சம்பவத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தொழிலதிபர் என்ற முறையிலேயே வீரமணியை எனக்கு தெரியும். மற்றபடி அவருக்கும் எனக்கும் தொடர்புகள் கிடையாது. அவரை எனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.

இந்த வழக்கில் யூடியூபர்கள் பலர் தேவையின்றி எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கருத்துகளை பரப்புகிறார்கள்.

ரஞ்சன் குமார் ஓர் அரசியல் தலைவர் மூலமாக என்னை வந்து சந்தித்தார். குடும்ப பிரச்சினை எனக் கூறி சாந்தியையும் ஒரு நாள் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். குடும்ப பிரச்சினை என்றும், வீரமணியிடம் பணம் நிறைய இருக்கிறது, ரூ.20 கோடியை அவரிடம் வாங்கி கொடுங்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு நான் உடன்படவில்லை. அதோடு அவர்களுடன்ஆன சந்திப்பு முடிந்துவிட்டது.

தற்போது எனது பெயரை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை. நான் மிரட்டினேன் என கூறும் ரஞ்சன் குமார், அப்போதே காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை?

பணம் பறிக்க நினைத்தவர்கள் ரஞ்சன் குமாரும் சாந்தியுமே. புதிய தமிழகம் கட்சியினர் எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் போலீஸிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.

போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கடுமையான குற்றச் செயல். அது மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக மக்கள் முன்னேற்ற கழக திருநெல்வேலி மாவட்ட செயலர் கண்மணி மாவீரன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில், ‘ தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்ற சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.

இது தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே தேவையற்ற அவதூறுகளை பரப்பி சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் முகநூல் பக்கத்தை முடக்கி அதை உபயோகிக்கும் நபரை கண்டறிந்து அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT