

பழனிசாமி
மதுராந்தகம்: “பணத்தாசையின் காரணமாக, ஓட்டுப் போட்ட மக்களை மறந்து, தனக்காக உழைத்தவர்களை மறந்து, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு எதிரணி வேட்பாளராகப் போட்டியிடுபவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “குதிரை பேரம் காரணமாக திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் இது. தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோதி இருக்க வேண்டும்.
கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் கட்சி மாறி இணைந்துள்ளனர். வெற்றி - தோல்வி பற்றி அதிமுக கவலைப்படாது. மக்களைப் பற்றி தான் கவலைப்படுவோம். எங்களைப் பார்த்து, தூர்ந்து போன கட்சி என்கிறார்கள்.
அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கி வேட்பாளரை நிறுத்திவிட்டு இன்றைக்கு என்னென்னவோ பேசுகிறார்களே... இந்த ஜாம்பவான்கள் எல்லாம் கரூர் சம்பவம் நடந்தபோது எங்கே சென்றார்கள்?
ராஜினாமா செய்த 5 நிமிடங்களில் தவெக உறுப்பினர் அட்டை பெற்றனர். அதோடு ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பே தவெகவில் இணைந்துவிட்டனர். கரூர் சம்பவத்தின்போது முதல்வர் விஜய் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீங்களா நாட்டை காப்பாற்ற போகிறீர்கள்?
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒரு கட்சித் தலைவர், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார் என்பதை இளைஞர்கள், மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கரூர் துயர சம்பவத்தின்போது 15 நாட்கள் தவெக அலுவலகம் மூடப்பட்டது. ஆனால் மக்களோடு மக்களாக துணை நின்றது அதிமுக. ரீலும், ரீஸ்ஸும் தான் தவெகவின் மூலதனம்.
52 ஆண்டுகள் அதிமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் அனுபவம் அளவுக்குகூட உங்கள் வயசில்லை. ஆனால், அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அடக்கி வாசிங்க தம்பி. உங்களை போல நிறைய பேரை பாத்துவிட்டோம்.
பணத்தாசையின் காரணமாக, ஓட்டுப் போட்ட மக்களை மறந்து, தனக்காக உழைத்தவர்களை மறந்து, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு எதிரணி வேட்பாளராகப் போட்டியிடுபவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
தவெக அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவெக கட்சி துவங்கி முன்று ஆண்டுகள் தான் ஆகிறது. வந்த உடனே இப்படிப்பட்ட வேலைகளை செய்தால், இவர்களா தூய்மையான ஆட்சி செய்கிறவர்கள்? குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல எம்.எல்.ஏல்க்களுக்கு ஆசை காட்டியுள்ளனர். இந்தியாவில் எந்த கட்சியும் இப்படி ஒரு இழிவான செயலை செய்யவில்லை. தவெக நெல்லிக்காய் மூட்டை போல, அவிழ்த்துவிட்டால் சிதறிவிடும்.
கரூர் வழக்கு இன்னும் முழுமை பெறவில்லை. அது முழுமை பெறும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த தீர்ப்புக்குப் பிறகுதான் அந்தக் கட்சி தமிழகத்தில் இருக்குமா, இல்லையா என்பது முடிவாகும்” என்று அவர் கூறினார்.