பணம் படைத்தவர்களும் அரசியல் சூது கற்றவர்களும் புதுச்சேரி அரசியலில் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டது கடந்த கால வரலாறு. பாஜக அமைச்சரான ஜான் குமார் அப்படி நினைத்துத்தான் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை புதுச்சேரி அரசியல் களத்துக்கு அழைத்து வந்தார்.
இப்போது பாஜக-வில் இருந்தாலும், வரும் தேர்தலில் சார்லஸை வைத்து தனி அணியாக தேர்தலைச் சந்தித்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கப் பார்க்கலாம் என்பதே ஜான் தரப்பு போட்டுவைத்த அரசியல் கணக்கு. ஆனால், அந்தக் கணக்கை சார்லஸே இப்போது பொய்க் கணக்காக்கி இருக்கிறார்.
சார்லஸை அமைச்சர் ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்டு எம்எல்ஏ, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் என பலரும் சேர்ந்து தான் புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவரும் எதிர்கால ‘தேவையை’ மனதில் வைத்து புதுச்சேரி மக்களுக்கு நல உதவிகளை வழங்கி திணறடித்தார். கடந்த ஓராண்டாக பல இடங்களில் நிரந்தரமாக மக்களுக்கு மதிய உணவும் அளித்து வருகிறது சார்லஸ் பெயரிலான அறக்கட்டளை.
அத்துடன், புதுச்சேரி அரசையும் முதல்வர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சிக்கவும் ஆரம்பித்தார் சார்லஸ். இத்தனைக்கும் காரணம் அமைச்சர் ஜான் குமார் தான் என்பதை ஊகித்த ரங்கசாமி, ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கியும் இன்னமும் இலாகா ஒதுக்காமல் இழுத்தடிக்கிறார். இதற்கு நடுவில் தான் சார்லஸ், ‘லட்சிய ஜனநாயகக் கட்சி’ என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினார்.
பாஜக-வின் ‘பி டீம்’ தான் சார்லஸ் என்று பரவலாக பேச்சுக் கிளம்பியதால் இதுகுறித்தான தனது அதிருப்தியை பாஜக தலைமைக்கு தெரிவித்தார் ரங்கசாமி. புதுச்சேரி பாஜக நிர்வாகிகளும் இதுகுறித்து டெல்லி தலைமையிடம் பேசினார்கள். இதையடுத்து அண்மையில், லாட்டரி அதிபர் மார்ட்டினையும் சார்லஸையும் டெல்லிக்கு அழைத்துப் பேசினார் அமித் ஷா. அவரது அறிவுறுத்தலின் பேரில் பொங்கலையொட்டி சார்லஸ் சுயேச்சை எம்எல்ஏ-க்களுடன் சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ‘காலில் விழுந்து’ ஆசி பெற்றார்.
இப்போது பாஜக-வினர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், சார்லஸும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நகர்வுகளைப் பார்க்கும் போது, சார்லஸ் கட்சியும் என்டிஏ-யில் சேர்வதற்கான முகாந்திரங்கள் தெரிகின்றன. ரங்கசாமி சம்மதித்தால் சார்லஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் வரைக்கும் ஒதுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.
சார்லஸின் இந்த திசைமாறிய திடீர் பயணத்தால், அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்த ஜான் குமார் தரப்பு நட்டாற்றில் விடப்பட்டது போல் தவிக்கிறது. இத்தனைக்கும் ஜான் குமாரின் இன்னொரு மகன் ரீகன் இப்போது சார்லஸ் கட்சியில் இருக்கிறார். அவரது இன்னொரு மகனான ரிச்சர்ட் எம்எல்ஏ இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவரும் ஜான் குமாரும் இத்தனை நாளும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர். இப்போது ஜான் குமார் மீண்டும் பாஜக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.
மாதக் கணக்கில் இலாகா இல்லாமலே இருக்கிறீர்களே என ஜான் குமாரிடம் கேட்டதற்கு, “எனது தொகுதி மக்களே கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ‘நாட்டையே ஆளும் பாஜக-வின் அமைச்சருக்கு இந்த நிலையா?’ என்று அவர்கள் என்னைக் கேட்பது வருத்தமாக இருக்கிறது. எங்கே சதி, தவறு நடக்கிறது எனத் தெரியவில்லை. புதுச்சேரிக்கு நல்லது செய்வதற்காகவே சார்லஸ் மார்ட்டினை அழைத்து வந்தேன்.
ஆனால் அவரை பாஜக வளையத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். காங்கிரஸிலிருந்து வந்தபோது என்.ஆர்.காங்கிரஸுக்கு வருமாறு ரங்கசாமி என்னை அழைத்தார். அப்போது நான் செல்லாததால் எனக்கு இலாகா தரவில்லையோ என்று தோன்றுகிறது” என்றார்.அப்படியானால் பாஜக-வை விட்டு வெளியேறுவீர்களா என்று கேட்டதற்கு, "அவர்களை விட்டு யாரும் செல்ல முடியாது" என்றார் சோகமாக.