சென்னை: இரும்பு நடைபாதை படிக்கட்டு சரிந்து விழுந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபலமான கட்டுமான நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் ராமாபுரம் சாந்தி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர இரும்பு செட்அறையில் தங்கியுள்ளனர்.
இவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு முதல்மாடி இரும்பு படிக்கட்டில் சாய்ந்தபடி ஒரே நேரத்தில் தங்களது செல்போனில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை நேரலையில் ரசித்துக் கொண்டிருந்தனர்.
15 அடி உயரம்
அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு பக்கவாட்டு கம்பி உடைந்தது. இதில், அனைவரும் 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததால் பலருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து நந்தம்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த அனைவரையும் மீட்டு கிண்டி மற்றும் போரூரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இவர்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரிஞ்சி மாஞ்சி (31) என்ற தொழிலாளி மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.