எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான ஜே.சி.டி.பிரபாகரன். அதிமுக-வில் அமைப்புச் செயலாளராகவும், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். அதிமுக-வை ஒன்றிணைக்க முயற்சி எடுத்து அது முடியாமல் போனதால் அரசியலை விட்டே ஒதுங்கி, தீவிர ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வரும் அவரை 'இந்து தமிழ் திசை'க்காக சந்தித்துப் பேசினோம்.
ஓபிஎஸ்ஸை விட்டு விலகி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கினீர்கள். அந்தக் குழுவில் ஒரு செயல்பாடும் இல்லையே?
2024 மக்களவை தேர்தல் முடிவு வெளிவந்த மறுநாளே ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு’ என்ற பாரதியார் பாடலை போஸ்டராக அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டினேன். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுக-வுக்கு வாழ்வு என தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக-வினர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அதைத் தொடர்ந்து பெங்களூரு புகழேந்திஉள்ளிட்டோருடன் இணைந்து ஒருங்கிணைப்பு முயற்சியில் இறங்கினோம். ஆனால், மூலைக்கு ஒருவராய் நின்று கொண்டிருக்கும் பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை இணைப்பது சாத்தியமில்லை என்பது எங்களுக்கு முதற்கட்டத்திலேயே தெரிந்து விட்டது. அதனால், இயற்கையே விடை கொடுக்கட்டும் என்று அமைதி காத்து வருகிறோம்.
அதிமுக ஒருங்கிணைப்பை பழனிசாமி ஏன் ஏற்க மறுக்கிறார்?
தொண்டர்கள் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவதும், அதை பழனிசாமி பிடிவாதமாக மறுப்பதும் தொடர்கிறது. தொண்டர்களையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் தன்னை கடுமையாக விமர்சித்தவர்களின் வீட்டுக்கே சென்று அரவணைத்தார். தன்னை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து போன்ற பலரை ஜெயலலிதா கட்சியில் சேர்த்துக்கொண்டார்.
1989 தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்து இருந்ததால் கருணாநிதி முதல்வராக வந்தார். அதன் பிறகு அணிகள் ஒன்றானதால் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்காகத் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
திமுக-வில் வைகோ மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தினாலும் பிறகு வந்த தேர்தல்களில், வைகோவுக்காக அறிவாலயக் கதவுகள் திறந்தே இருப்பதாக கருணாநிதி கூறினார். அவர் எங்களுக்கு எதிரியாக இருந்தாலும், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு தலைவன் அத்தகைய முடிவை எடுத்தார் என்ற படிப்பினை அதில் இருக்கிறது. இதெல்லாம் அறிந்தும் பழனிசாமி பிடிவாதமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை.
அதிமுக ஒன்றிணையாவிட்டால் 2026-ல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் பழனிசாமியின் தலைமையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பழனிசாமியிடம் இருந்து யாரும் ஓபிஎஸ், டிடிவி அணிக்குச் செல்லவில்லை. அதனால் அதிமுக-வை ஒருங்கிணைக்காமல் வெற்றி பெற்று விடலாம் என்று பழனிசாமி நம்புகிறார். அவர் நினைப்பது போல அதிமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
அதிமுக பொதுச்செயலாளராக, எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?
கட்சி வளர்ச்சிப் பணிகளிலும், ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும் தொண்டர்களும், மக்களும் விரும்பும் வேகத்தை பழனிசாமி இன்னும் காட்டவில்லை என்றே கருதுகிறேன்.
நான்கரை ஆண்டு திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
மகளிர் உரிமைத் தொகை மற்றும் நகை கடன் தள்ளுபடியை அனைவருக்கும் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லிவிட்டு ‘தகுதியானவர்களுக்கு’ என மாற்றி திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசின் குறை. மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்கும் ‘அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டம்' ஆகியவற்றை நிறையாகப் பார்க்கிறேன். எம்ஜிஆரின் மதிய உணவு திட்டத்தை பின்பற்றி காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததும் பாராட்டுக்குரியது.
2026 தேர்தலில் விஜய்யின் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் தவெக-வில் இணைய இருப்பதாக தகவல் வருகிறதே..?
நான் திமுக-வில் இணைய இருப்பதாகவும், அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் போது அதிமுக-வில் இணைய இருப்பதாகவும் கூடத்தான் தகவல் பரப்பப்பட்டது. ‘என்றும் மக்கள் பணி' என்றுதான் 1972-ல் எம்ஜிஆர் தலைமையை ஏற்று அதிமுக-வில் சேர்ந்தேன். அன்றிலிருந்து தன்னலம் கருதாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன். இறைவனுக்கு சித்தமானால் என்னுடைய மக்கள் பணி தொடரும். பொதுவாழ்வில் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரைவில் முடிவெடுப்பேன்.