

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி. அக்கட்சியின் தலைவரான ஷேக் தாவூத் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பயணிப்பவர். ‘ஜனநாயகத் திருவிழாவு’க்காக அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
பாஜக-வுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
முதலில், பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை ஏற்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி. மோடி இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் பிரதமர். அவரை எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரதமர் என்று சொல்ல முடியும்? எனவே, பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் நாம் இருக்கக் கூடாது என்பது என் எண்ணம் அல்ல.
இரட்டை இலையிலேயே போட்டியிட்டு வரும் நீங்கள் இம்முறை அதிமுக-விடம் எத்தனை தொகுதிகளைக் கேட்பதாக இருக்கிறீர்கள்?
எத்தனை இடங்களை கேட்பது என்றெல்லம் அரசியல் பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த அரசு எல்லா மக்களுக்குமான அரசாக இருக்கும் என்பதைத்தான் தொடக்கம் முதலே நாங்கள் கருத்தில் கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் 2 இடங்களிலோ அல்லது 5 இடங்களிலோ வெற்றிபெற்று தனியாக சட்டம் இயற்றிவிட முடியுமா? தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவோம். இல்லை என்றாலும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் இருப்போம்.
அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் எந்த அளவுக்கு கவனிக்கப்பட்டது?
ஜெயலலிதா ஆட்சியில் நாங்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக நிறைய மாற்றங்கள் வந்தன. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வாங்கிக் கொடுத்தோம். இதில் அனைத்து மக்களும் பயன் பெற்றார்கள். இதைத்தாண்டி என்று பார்த்தால் உமறுப் புலவருக்கு மணிமண்டபம் கட்டினார்கள். திண்டுக்கலில் ஹைதர் அலிக்கும் காயிதே மில்லத்துக்கும் மணிமண்டபம் கட்டினார்கள்.
அதிமுக பலவாறாக பிரிந்து கிடப்பது தேர்தலில் அதன் வெற்றியை பாதிக்காதா?
நிச்சயம் பாதிக்காது. காரணம், மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்கள். அதிமுக-வுக்கு வாக்களிக்கும் மக்கள் யார் தலைவராக இருக்கிறார் என்பதை விட கட்சியின் சின்னத்தைத்தான் பார்க்கிறார்கள். அதனால், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் அதிமுக-வின் வாக்கு வங்கி குறைந்துவிடாது.
தவறான பாதைக்குச் செல்லும் முஸ்லிம் இளைஞர்களை நல்வழிப்படுத்த எத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கிறீர்கள்?
என்னைச் சந்திக்கும் இளைஞர்களிடம், முதலில் நாம் இந்தியர்கள். நாம் இனத்தால் தமிழன்; தேசியத்தால் இந்தியன் என்று விளக்கிக் கூறுகிறேன். கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் மாமன் - மச்சான் என்று அன்போடு பழகுகின்றனர். மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் தான் ஓட்டுக்காக மக்களைப் பிரிக்கிறார்கள். மத ரீதியாக அடிப்படைவாதிகளாக இருந்து பொருளாதார ரீதியாக வலிமை குறைவாக இருப்போர்தான் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறை பக்கம் செல்கிறார்கள். மதத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களும் ஏழ்மையாக இருப்பவர்களும் எளிதில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இது எல்லா மதத்திலும் இருக்கிறது.
அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகச் சொல்லப்படுவது குறித்து..?
எல்லையோர நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊடுருவலை தடுக்கவே சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்படி இருக்கையில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று அரசியல் கட்சிகள் ஏன் பிரச்சாரம் செய்கின்றன? அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ இது நடக்குமா? சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பயங்காட்டுவோர்தான் உண்மையில் பிரிவினைவாதிகள். இப்படித்தான் வக்பு சட்டத் திருத்தத்தையும் தேவையில்லாமல் எதிர்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன?
மக்களை சாதி ரீதியாக, சமூக ரீதியாக பிரிப்பது திமுக ஆட்சிதான். இது முழுக்க முழுக்க ஓட்டு அரசியல். ஓட்டுக்காக, எந்தத் தொகுதியில் எந்த சமூகத்தினர் அதிகம் இருக்கிறார்களோ அவர்களுக்கே அங்கு சீட் கொடுப்பார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சர் ஆக முடியும். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். திமுக ஆட்சியில் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மை சமூகத்தினர் அமைச்சர்களாக ஆனாலும் அவர்களால் சுயமாக என்ன செய்துவிட முடிகிறது?