தமிழகம்

செல்வ வரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரியே: சென்னை உயர் நீதிமன்றம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது சர தான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பல ஆண்டுகள் செல்வ வரி (wealth tax) கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால், வருமான வரித் துறையின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்த நிலையில், இந்த செல்வங்கள் யாருக்கு சொந்தமானவை என்பதை வருமான வரித்துறை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது தவறு எனவும், வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், அவரை விடுவித்து பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் கூறி, வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று மேல் முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT