“இது எங்கள் மாநிலம்; எங்கள் உரிமை” - மாணிக்கம் தாகூருக்கு டி.கே.சிவகுமார் பதில்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்
“இது எங்கள் மாநிலம்; எங்கள் உரிமை” - மாணிக்கம் தாகூருக்கு டி.கே.சிவகுமார் பதில்
Updated on: 
2 min read

பெங்களூரு: மேகேதாட்டு அணையை நாங்கள் எங்கள் மாநிலத்தில்; எங்கள் நிலத்தில் கட்ட உள்ளோம். இது எங்கள் உரிமை. என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மைசூரில் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், மேகதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றமே இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகேதாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

மேகேதாட்டுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்.

காவிரி உரிமைக்காகத் தமிழ்நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழ்நாட்டின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்.’ என தெரிவித்திருந்தார்.

மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், “தனது மாநிலத்தைப் பாதுகாப்பது அவரது (மாணிக்கம் தாக்கூர்) கடமை. ஆனால், அவருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. மாணிக்கம் தாக்கூர் தனது குழுவினருடன் கர்நாடகா வரட்டும். அணை கட்டப்படும் இடத்துக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன்.

உண்மையில் இந்த திட்டம் அவர்களுக்கு (தமிழ்நாட்டுக்கு) சாதகமானது. தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு இருக்க அவர்களுக்கு இதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? எந்த பிரச்சினையும் கிடையாது.

மேகேதாட்டு விவகாரத்தை அவர்கள் வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதை அனைவரும் மதிக்க வேண்டும்.

வனத்துறைக்கு ஈடாக மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் முன் உள்ள சவால். இதற்கு வனத்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். மற்றபடி, இது எங்கள் மாநிலம்; எங்கள் நிலம்; எங்கள் உரிமை.

177 டிஎம்சி தண்ணீரைப் பெற தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு. அது அவர்களின் கடமையும்கூட. அவர்கள் தாராளமாகக் கேட்கட்டும். இந்த திட்டம் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகப் பயன் தரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

“இது எங்கள் மாநிலம்; எங்கள் உரிமை” - மாணிக்கம் தாகூருக்கு டி.கே.சிவகுமார் பதில்
“அஜித் பவார் மரணம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” - என்சிபி இணைப்பு குறித்து சுப்ரியா சுலே கருத்து

X