நாகப்பட்டினம்: திமுக தயவால் வெற்றி பெற்றுவிட்டு, அக்கட்சிக்கு எதிராக அமைச்சர் ஷாஜகான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
நாகை தொகுதி எம்எல்ஏ அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஜவாஹிருல்லா அலுவலகத்தை திறந்து வைத்தார். அவருக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியது: தமிழகத்தில் ஒரே நாளில் 5 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அதிகரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியாகும். தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. திமுக போட்டசாலையில் பயணித்து, திமுகவினர் தயவால் வெற்றிபெற்ற அமைச்சர் ஷாஜகான் திமுகவுக்கு எதிராக பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஷாஜகானை விமர்சித்து நேற்று பாபநாசத்தில் திமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில் திமுகவை விமர்சிக்கும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர்.