தமிழகம்

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரும் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை?

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ’ஜன​நாயகன்’ திரைப்​படத்தை வெளி​யிட தணிக்கைச் சான்​றிதழ் வழங்​க​க் கோரியும் சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறுத்தி வைக்க கோரி​யும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப்​படம் ‘ஜன​நாயகன்’. கேவிஎன் நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த படத்தை ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்​ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழு​வதும் படத்தை வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்துவந்தன. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.

இந்நிலையில் படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து படத்​த​யாரிப்பு நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வரின் உத்​தரவை ரத்து செய்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யத்​தின் சார்​பில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்டது. இதை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம். வாஸ்​தவா தலை​மையி​லான அமர்​வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்​தது. மேலும் இந்த மேல்​முறை​யீட்டு வழக்கை ஜன. 20-ம் தேதிக்கு தள்ளிவைத்​து, பதில் மனு தாக்​கல் செய்யுமாறு தயாரிப்பு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனத்​தின் சார்​பில் வழக்​கறிஞர் இ.சி. அகர்​வாலா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில், சென்னை உயர் நீதி​மன்றத்தின் இடைக்​கால தடையை நிறுத்தி வைக்க வேண்​டும் என்​றும், தணிக்கை வாரி​யத்​தின் வாதத்தை கேட்​காமல் உத்​தர​வைப் பிறப்​பிக்க வேண்​டும் என்​றும் கோரப்​பட்​டுள்​ளது.

இதனிடையே தங்​கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்​தவொரு உத்​தர​வை​யும் பிறப்​பிக்க வேண்​டும் என்று தணிக்கை வாரி​யத்​தின் வழக்​கறிஞர் அம்​ரீஷ் குமார் கேவியட் மனுவை தாக்​கல் செய்​துள்​ளார்.

உச்ச நீதி​மன்​றத்​தில் கேவிஎன் நிறு​வனம் தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீட்டு மனு இன்று வி​சா​ரணைக்கு எடுத்​துக்​ கொள்​ளப்​படலாம்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT