ஜெகத்ரட்சகன்
புதுச்சேரியில் கடந்த தேர்தலில் தொகுதிகளுக்காக காலில் விழுந்து காங்கிரஸார் அழுததால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, உப்பளம் தொகுதிகளில் நேற்று திமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் ஸ்டாலின் ஆட்சி, அவருடைய திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரிக்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.
புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களை கேட்பது பற்றி கேட்கிறீர்கள். இங்குள்ள 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் ஆசை. ‘மற்றவர்கள் சொல்வது எதையும் கேட்காதீர்கள். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசி முடிவெடுப்போம்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியிருக்கிறார். அவர் கூறியது போலவே, மற்றவர்கள் சொல்வது எதையும் கூட்டணி விஷயத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. புதுச்சேரியில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் பேசி முடிவெடுப்பார்.
ஸ்டாலின் எவ்வளவு பெருந்தன்மையோடு, ‘ராகுல் காந்தியை பிரதமராக்குவேன்’ என்று முதன் முதலில் சொன்னார். அந்த நன்றி உணர்வை காங்கிரஸார் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக போன்று நட்புடன் கூட்டணியை மதிப்பது உலகத்தில் எந்தக் கட்சியும் கிடையாது. மாணிக்கம் தாகூர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஏற்கெனவே புதுச்சேரியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், 30 தொகுதிகளிலும் உதய சூரியன் உதிக்கும் என்று கூறினீர்கள். காங்கிரஸ் கூட்டணிக்குள் வரும்போது எப்படி உதிக்கும்?’ என்று கேட்டதற்கு, “கடந்த 2021 தேர்தலில் உதய சூரியனை தனியே விட்டிருந்தால் 30 தொகுதிகளிலும் உதித்திருக்கும்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்வதற்குள்ளாகவே தொகுதிகளுக்காக காங்கிரஸார் கையில், காலில் விழுந்து அழுது முடித்து விட்டார்களே. இதனால், திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இல்லாவிட்டால் 30 தொகுதிகளிலும் அப்போதே சூரியன் உதித்திருக்கும்” என்றார்.