சென்னை: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கியதாக எழுந்த புகாரின் பேரில், அமைச்சர் சேகர்பாபு மகன்கள் தொடர்புடைய நிறுவனம் உள்பட 5 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை வெற்றி பெற வைக்கும் நோக்கில், துறைமுகம் தொகுதி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கும், வருமானவரித் துறையினருக்கும் புகார்கள் வந்தன.
இதையடுத்து, மயிலாப்பூரில் சேகர்பாபு மகன்கள் ஜெயசிம்மன், விக்னேஷ் ஆகியோரின் தொடர்புடையதாகக் கூறப்படும், சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். உடன் தேர்தல் பறக்கும் படையினரும் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டனர். சோதனையின் முடிவில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் வடபழனியில் அருள்முருகன், கீழ்ப்பாக்கத்தில் பிரேம் குமார் ஆகியோரது வீடுகளிலும், அதைத் தொடர்ந்து ஏழுகிணறு, அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் 5 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமானவரித் துறையினருடன், பறக்கும் படையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.